Group 2 Exam: சென்னையில் தேர்வர்கள் போராட்டம்.. தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 முதன்மை தேர்வுகள் ஒத்திவைப்பு!
குரூப் 2 முதன்மை தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுவதாக இருந்தது. சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் தேர்வு எழுத வந்தவர்களுக்கு தேர்வு மையம் மாற்றப்பட்டதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் குரூப் 2 முதன்மை தேர்வு எழுத வந்த தேர்வர்கள் திடீரென தேர்வு மையம் மாற்றப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த தேர்வானது ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 2 முதன்மை தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுவதாக இருந்தது. அதன்படி காலை முதல் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அந்த வகையில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டிஜி வைஷ்ணவா கல்லூரியில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தவர்கள் வருகை தந்தனர். ஆனால் அங்கு அவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கப்படவில்லை என தெரிய வந்தது.
ஹால் டிக்கெட்டில் தேர்வு மையம் டிஜி வைஷ்ணவா கல்லூரி என குறிப்பிட்டு விட்டு இங்கு தேர்வு முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் இருப்பதைக் கண்டு தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அங்கிருந்த அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் டிஜி வைஷ்ணவா கல்லூரியில் தேர்வு எழுத வந்தவர்கள் உடனடியாக நந்தனம் கல்லூரியில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதனை ஏற்காத தேர்வர்கள் தேர்வு மையம் மாற்றப்பட்டத்தை கண்டித்து அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரும்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தேர்வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நந்தனம் கல்லூரிக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தருவதாகவும், அங்கு தேர்வு எழுதும்படியும் தெரிவித்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை நிராகரித்த தேர்வர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரம் நெருங்கிய நிலையில் திட்டமிட்டபடி குரூப் 2 தேர்வு நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று நடைபெறுவதாக இருந்த குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசும்போது, “ 5 லட்சம் பேர் எழுதிய குரூப் 2 துணைத்தேர்வுக்கு சரியாக தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் வெறும் 9 ஆயிரம் பேர் எழுதும் முதன்மை தேர்வுக்கு தேர்வு மையம் ஒதுக்க முடியவில்லையா? என ஆவேசமாக தெரிவித்தனர்.























