குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கு இந்த மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


2022ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணி குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர், பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றன. காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது. 


இதற்கிடையே தேர்வின் காலை அமர்வில் மாநிலம் முழுவதும் சென்னை, கடலூர், சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் குளறுபடி ஏற்பட்டது. சென்னை, கடலூர், சேலம், தஞ்சை மாவட்டங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருந்தன. வினாத் தாள்களின் எண்களும் மாறி வந்ததால், தேர்வைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தேர்வு குளறுபடி குறித்து டிஎன்பிஎஸ்சி நேற்று (பிப்.27) ஆலோசனை நடத்தியது. 


இதைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌ அஜய்‌ யாதவ்‌ தெரிவித்துள்ளதாவது:


’’ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்‌ தேர்வு -2 (தொகுதி-2 & 2ஏ‌ முதன்மை எழுத்துத்‌ தேர்வு 25.02.2023 மு.ப. & பி.ப.) அன்று 20 மாவட்டத்‌ தேர்வு மையங்களில்‌ நடைபெற்றது. இந்த முதன்மைத்‌ தேர்வு பின்வரும்‌ இரு தாட்களை உள்ளடக்கியது:
1. தாள்‌ 1 - கட்டாயத்‌ தமிழ்மொழி தகுதித்‌ தாள்‌ - முற்பகல்‌
2. தாள்‌ -2- பொது அறிவுத்தாள்‌ - பிற்பகல்‌ (நேர்முகத்‌ தேர்விற்கு / தெரிவிற்கு தாள்‌ 2ல்‌ பெறப்படும்‌ மதிப்பெண்கள்‌ மட்டுமே கருத்தில்‌ கொள்ளப்படும்‌)


வருகைப்பதிவேட்டில்‌ உள்ள தேர்வர்களின்‌ பதிவெண்களின்‌ வரிசையிலும்‌, வினாத்தாட்களில்‌ உள்ள பதிவெண்களின்‌ வரிசையிலும்‌ இருந்த வேறுபாட்டின்‌ காரணமாக காலை வினாத்தாட்கள்‌ வழங்குவதில்‌ காலதாமதம்‌ ஏற்பட்டது. இதனை ஈடுசெய்யும்‌ பொருட்டு தேர்வர்களுக்கு கூடுதல்‌ நேரம்‌ வழங்கப்பட்டு முற்பகல்‌ தேர்வுகள்‌ நடைபெற்று முடிந்தன.


பிற்பகல்‌ தேர்வு நேரம்‌, 2.30 மணிக்குத்‌ துவங்கி 5.30 மணி வரை நடைபெறும்‌ வகையில்‌ மறுவரையறை செய்யப்பட்டது. அதன்படி பிற்பகல்‌ தேர்வானது துவங்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களிலும்‌ சீராக எவ்வித இடர்பாடுமின்றி நடைபெற்று முடிந்தது. பிற்பகல்‌ தேர்வில்‌ 94.30% தேர்வர்கள்‌ பங்கேற்றனர்‌.


நியாயமான கோரிக்கைகள்‌ கருத்தில்‌ கொள்ளப்படும்‌


முற்பகல்‌ தேர்வானது கட்டாயத்‌ தமிழ்‌ தகுதித்‌ தேர்வாகுமாகையால்‌ இத்தேர்வில்‌ தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது மற்றும்‌ இந்த மதிப்பெண்கள்‌ தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இது தகுதித்தேர்வு மட்டுமே என்பதுடன்‌ தேர்வாணையத்தின்‌ முன்‌ அனுபவத்தின்படி 98% ற்கும்‌ கூடுதலான தேர்வர்கள்‌ தேர்வாணையத்தால்‌ நடத்த்ப்பட்ட தமிழ்‌ தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்றுள்ளனர்‌. இருப்பினும்‌, தேர்வர்களுக்கு
முற்பகல்‌ தேர்வில்‌ ஏற்பட்ட சிரமங்களைக்‌ கருத்தில்‌ கொண்டு, தேர்வர்களின்‌ நியாயமான கோரிக்கைகள்‌ சரியான முறையில்‌ விடைத்தாட்கள்‌ திருத்தும்போது, கருத்தில்‌ கொள்ளப்படும்‌.


தாள்‌-॥ மதிப்பெண்கள் மட்டுமே!


தேர்வாணையத்தின்‌ உடனடி அறிவுறுத்தல்களின்படி, பிற்பகல்‌ தேர்விற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டமையால்‌, பிற்பகல்‌ தர வரிசைக்கு கருதப்படும்‌ தாள்‌ பொது அறிவுத்தாள்‌ தேர்வானது எவ்வித இடையூறுமின்றி அனைத்து தேர்வு மையங்களிலும்‌ சுமுகமாக நடைபெற்று முடிந்தது. மேலும்‌ இந்த தாள்‌-॥ல்‌ தேர்வர்கள்‌ பெறும்‌ மதிப்பெண்கள்‌ மட்டுமே தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படும்‌.


இந்த வினாத்தாள்‌ மற்றும்‌ விடைத்தாள்‌ தொகுப்பிற்கும்‌, வருகைப்பதிவேட்டிற்கும்‌ இடையிலான வரிசை வேறுபாடே முற்பகல்‌ தேர்வில்‌ காலதாமததிற்குக்‌ காரணம்‌. இந்த வேறுபாடு ஏற்படக்‌ காரணமான அனைவர்‌ மீதும்‌ தேர்வாணையம்‌ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்‌’’.


இவ்வாறு தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌ அஜய்‌ யாதவ்‌ தெரிவித்துள்ளார்.