ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்கக் கோரியும் போட்டித் தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வலியுறுத்தியும் பட்டதாரி ஆசிரியர் தேர்வர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நுங்கம்பாக்கம், டி.பி.ஐ. எனப்படும் பள்ளிக் கல்வி வளாகத்தில், நேற்று 200க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தங்களின் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன், ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதை அடுத்து கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர்கள் பேசியதாவது:


தமிழகத்தில் 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. அதன்மூலம் சுமார் 19 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். பிறகு 10 ஆண்டுகளாக ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் நியமனத்துக்காக எந்தத் தேர்வுகளையும் நடத்தவில்லை.


கடந்த 11 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். பதவி உயர்வு பெற்று மாறுதலாகி உள்ளனர். இதற்கிடையே கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு மட்டும் ஆசிரியர் நியமனத் தேர்வு நடத்தப்பட்டது. அதில், 40,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், 37 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர்.


முழுமையாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்


 7300-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ள நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம், 3,192 காலியிடங்களை மட்டுமே நிரப்ப உள்ளதாக அறிவித்தது. 11 ஆண்டுகளாக ஆசிரியர்கள் காத்திருக்கும் நிலையில், முழுமையாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அதேபோல ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கான தேர்விற்கு இதுவரை உத்தேச விடை குறிப்புகூட வெளியிடப்படவில்லை.


2768 காலிப் பணியிடங்களை மட்டுமே நிரப்ப முடிவா?


இதுகுறித்து இடைநிலை ஆசிரியர்கள் கூறும்போது, ’’அக்டோபர் 2023 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 6553-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், ஆனால் தற்போது 2768 காலிப் பணியிடங்களை மட்டுமே நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதனால் காலி இடங்களை நிரப்ப வேண்டும். அதேபோல் தேர்வு முடிவுகளையும் உடனே வெளியிட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.