அரசு ஊழியர்களின் உயர் கல்விக்கான ஊக்கத்தொகையை திமுக அரசு அறிவித்துள்ள நிலையில், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு அவர்கள் வகிக்கும் பதவிக்குத் தேவையான கல்வித் தகுதியை விடக் கூடுதல் தகுதியைப் பணிக் காலத்தில் பெற்றால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசின் சார்பில் ஊக்கத் தொகை வழங்கப்படும். அதாவது உயர் கல்வியை முடிப்பவர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் இருந்து 6 சதவீத உயர்வு வழங்கப்படும். இந்த உயர்வு பணிக்காலம் முழுவதும் அமலில் இருக்கும். இதனால் மாதாமாத பெறும் சம்பளமும் அதிகரிக்கும். 


1960களில் இருந்து அமல்


அதேபோல அடிப்படைச் சம்பளத்தில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும் அகவிலைப் படியும் உயர்த்தி வழங்கப்படும். இதுபோல ஓர் அரசு ஊழியர் தனது பணிக் காலத்தில், அதிகபட்சமாக இரண்டு முறை ஊதிய உயர்வு பெற முடியும்.  1960களில் இருந்து இந்த நடைமுறை அமலில் உள்ளது. எனினும் கடந்த 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் கொரோனா தொற்றைக் காரணம் காட்டி, கூடுதல் தகுதிக்கான ஊக்கத் தொகை ரத்து செய்யப்பட்டது.




இந்த நிலையில் திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், ’’திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்‌ பணிக்காலத்தில்‌ உயர் கல்வி கற்று பட்டம்‌ பெறும்‌ ஆசிரியர்களுக்கு திமுக ஆட்சியில்‌ அறிஞர்‌ அண்ணா‌ அறிவித்து வழங்கி வந்த ஊக்கத்தொகை அ.தி.மு.க அரசினால்‌ நீக்கப்பட்டுவிட்டது. இந்த ஊக்கத்தொகை மீண்டும்‌ தொடர்ந்து வழங்கப்படும்’’‌ என்று தெரிவித்திருந்தது. 


இதையடுத்து முதலமைச்சர்‌ ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவை விதிகளின்‌ விதி 110-ன்‌ கீழ்‌ சட்டமன்றத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார், “அரசுப்‌ பணியாளர்கள்‌ தங்கள்‌ பணிக்காலத்தில்‌ பெற்றிடும்‌ கூடுதல்‌ கல்வித்‌ தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020-ம்‌ ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அரசுப்‌ பணியாளர்கள்‌ பெற்றிடும்‌ கூடுதல்‌ கல்வித்‌ தகுதியின்‌ மூலம்‌ அவர்களுடைய பணித்திறன் மற்றும்‌ அவர்களது செயல்பாடுகள்‌ மேம்படுவதை ஊக்குவிக்கும்‌ பொருட்டு, உயர்கல்வித்‌ தகுதிகளுக்கான ஊக்கத்தொகை, மத்திய அரசு வழிகாட்டு முறைகளின்‌ அடிப்படையில்‌ விரைவில்‌ அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்‌.




என்ன படிப்புக்கு என்ன தொகை?


அதன்படி ஒரு முறை மொத்தமாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதில் பிஎச்‌.டி. படிப்புக்கு ரூ.25,000 தொகையும், முதுகலை பட்டம்‌ அல்லது அதற்கு சமமான படிப்பு ரூ.20,000 தொகையும் பட்டம்‌, டிப்ளமோ படிப்புக்கு 10,000 ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 


நிகழ் காலத்தில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், உயர் கல்வியில் சேருவோர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.


பி.இ., பி.டெக், எம்.இ., எம்பிஏ உள்ளிட்ட தொழில்முறைப் படிப்புகளையும் முதுகலைப் படிப்புகளையும் முடித்தவர்கள் அரசுப் பணிக்காகத் தயாராகும் முயற்சியில் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் அரசு ஊழியர்கள் ஆனால், அவர்களின் உயர் கல்வித் தகுதி அடிப்படையில், தேவையான ஊதிய உயர்வு வழங்க வேண்டி இருக்கும், அதுவும் மாதாமாதம். 




ஒருமுறை மட்டுமே ஊக்கத்தொகை


தமிழக அரசின் நிதி நிலையைக் கருத்தில்கொண்டு, மாதாமாதம் ஊக்கத்தொகை உயர்வு வழங்குவதைத் தவிர்து ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தேர்தல் வாக்குறுதியில், ஊக்கத்தொகை மீண்டும்‌ தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, ஒருமுறை மட்டுமே வழங்குவது சரியில்லை என்று விமர்சித்துள்ளன.


இதற்கிடையே நவம்பர்‌ 1 அன்று மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்‌ என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சங்கங்களில் முக்கியமான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. 


அதேபோல நவம்பர்‌ 15 முதல்‌ நவம்பர்‌ 24 வரை ஆசிரியர்‌ -அரசு ஊழியர்‌ - அரசுப்‌ பணியாளர்‌ சந்திப்பு போராட்ட பிரச்சார இயக்கமும் நவம்பர்‌ 25 மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ மறியல்‌ போராட்டமும் நடைபெறும் என்று அறிவித்துள்ள ஜாக்டோ ஜியோ, டிசம்பர்‌ 28 லட்சக்கணக்கான ஆசிரியர்- அரசு ஊழியா்‌- அரசுப்பணியாளர்‌ பங்கேற்கும்‌ கோட்டை முற்றுகைப்‌ போராட்டம்‌ நடைபெறும் என்று அறிவித்துள்ளது.


அண்மையில் 4 ஆசிரியர் சங்கங்கள் திமுக அரசு, தனது தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றுகோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.