அரசுப் பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி “தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதி என்னவானது?” என்று கேளுங்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில்‌ அரசுப்பள்ளி கல்விச்‌ சூழல்‌ தொடர்ந்து சரிந்து வருவதாகவும் சமூக, பொருளாதார ரீதியாகவும்‌ ஒடுக்கப்பட்டவர்கள்‌ மற்றும்‌ பிறருக்கும்‌ இடையே கற்றல்‌ இடைவெளி கூர்மையாக அதிகரித்து வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையாக விமர்சித்து இருந்தார்.

எதிர்காலம்‌ சமரசம்‌

50 சதவீதத்துக்கும்‌ அதிகமான உயர்நிலைப்‌ பள்ளி மாணவர்களால்‌ இரண்டு இலக்க கூட்டல்‌-கழித்தல்களைக்‌ கூட செய்ய இயலவில்லை.‌ போட்டி உலகிலும்‌, செயற்கை நுண்ணறிவு மற்றும்‌ மேம்பட்ட புதிய தொழில்நுட்பங்கள்‌ இயக்கும் பொருளாதாரத்திலும்‌, நமது வறிய நிலை மற்றும்‌ ஒடுக்கப்பட்ட மக்களின்‌ எதிர்காலம்‌ மிகவும்‌ சமரசம்‌ செய்யப்பட்டுள்ளது என்றும் சுதந்திர தின உரையில் ஆளுநர் தெரிவித்து இருந்தார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

ஆர்.எஸ்.எஸ். மனநிலையுடன் எப்போதும் அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பும் ஆளுநர் அவர்களே…!

ஏழை மாணவர்களின் படிப்பின் மீது அக்கறை உள்ளவர் போல, “நானும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன்” என்பதை காட்டிக்கொள்வதற்காக நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கல்வித்துறையை நோக்கி இப்படி பேசுவது உங்களின் வாடிக்கையாகிவிட்டது.

எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் எண்ணிலடங்காதது. சாதனையாளர்களை மக்களும் திராவிட மாடல் அரசும் கொண்டாடி வருகிறது.

கமலாலயத்தின் ASER எனும் போலி அறிக்கையை உயர்த்திப்பிடிக்கும் நீங்கள், அரசுப் பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி “தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதி என்னவானது?” என்று கேளுங்கள்’’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.