பல்கலைக்கழகங்கள் என்ற பெயரில் மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.     


நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களை யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு கண்காணித்து வருகிறது. அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவியும் வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் போலி பல்கலைக்கழகங்களின் விவரங்களை யுஜிசி வெளியிடுவது வழக்கம்.


டிகிரி வழங்க எந்த அதிகாரமும் இல்லை


அதன்படி, இந்த ஆண்டு நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாகவும் 2 பல்கலைக்கழகங்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாகவும் யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 8 பல்கலைக்கழகங்கள் போலியாக இயங்கி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பல்கலைக்கழகங்களுக்கு டிகிரி வழங்க எந்த அதிகாரமும் இல்லை என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது. 


மக்களவையில் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதுதொடர்பான பட்டியலை சமர்ப்பித்துள்ளார். இதுதொடர்பான விவரங்கள் யுஜிசி தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.


அரசு மற்ற நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது


பொது மக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பிற பங்குதாரர்களை எச்சரிப்பதற்காக சமூக ஊடகங்கள் மற்றும் யுஜிசி இணையதளம் மூலம் விழிப்புணர்வுக்கான பொது அறிவிப்புகளை வெளியிடப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல், இதுபோன்ற போலி பல்கலைக்கழகங்களுக்கு எதிராக அரசு மற்ற நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.


போலி பல்கலைக்கழகங்கள் எவை?


டெல்லி



  1. அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம்

  2. வணிக பல்கலைக்கழக நிறுவனம்

  3. ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் டெல்லி

  4. தொழிற்கல்வி பல்கலைக்கழகம்

  5. ஏடிஆர்- மத்திய நீதித்துறை பல்கலைக்கழகம்

  6. இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம்

  7. சுய வேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம்

  8. அத்யாத்மிக் விஸ்வ வித்யாலயா (ஆன்மிக பல்கலைக்கழகம்)



உத்தரப்பிரதேசத்தில் 7 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. அதேபோல கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஒடிசா, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன.


கர்நாடகா


படகான்வி சர்க்கார் உலக திறந்தநிலை பல்கலைக்கழக கல்வி சங்கம், கோகால்க் பெல்காம் (Badaganvi Sarkar World Open University Education Society, Gokalq Belgaum)


கேரளா
புனித ஜான் பல்கலைக்கழகம், கிஷனாட்டம் (St. John's University, Kishanattam, Kerala)


புதுச்சேரி


ஸ்ரீ போதி உயர் கல்வி அகாடமி, எண். I E6, திலாஸ்பேட்டை, வழுதாவூர் சாலை, புதுச்சேரி - 605 009 (Sri Bodhi academy of Higher Education, No. I E6, Thilaspet, Vazhuthavoor Road)


ஆந்திரப் பிரதேசம்


கிறிஸ்து புதிய ஏற்பாடு பல்கலைக்கழகம் (Christ New Testament Deemed University, Andhra Pradesh)


அதே நேரத்தில், தமிழ்நாட்டில் போலி பல்கலைக்கழகக்ங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.