ஒரு மாதத்தில் 1ஆம் வகுப்பில் மட்டும் 1.05 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரம் உயரும் பொருட்டு பல்வேறு முன்னோடித் திட்டங்கள் பள்ளிக் கல்வித் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

என்னென்ன வசதிகள்?

அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகள் (Smart Class Rooms), அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் (HI- Tech Labs) அதற்குத் தேவையான இணையதள (Broadband Connectivity) வசதியுடன் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினியும் (TAB) வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் பல்வேறு உதவித் தொகைகள், தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவையும் வழங்கப்படுகின்றன. புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் மூலம் உயர் கல்வி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாதாமாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் இத்தகைய கற்றல் வாய்ப்புகள், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு உதவித் தொகைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவர் சேர்க்கை தொடக்கம்

இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025 - 2026ஆம் ஆண்டிற்காக மாணவச் சேர்க்கையை மார்ச் 1ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.

1,17,310 பேர் சேர்க்கை

சேர்க்கை தொடங்கியது முதல் கடந்த ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் உட்பட ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள்.

தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல நம் அரசுப்பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமிடும்’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்.