பாடப் புத்தகங்களில் உள்ள நீண்ட கட்டுரைகளைப் படிப்பது பல மாணவர்களுக்குச் சலிப்பைத் தரக்கூடும். இதைக் கருத்தில் கொண்டு, கூகுளின் புதிய ஏஐ கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பாடங்களைப் படிப்பதை எளிமையாக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் ‘லேர்ன் யுவர் வே’ (Learn Your Way) எனும் புதிய செயற்கை நுண்ணறிவு கருவியைக் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடினமான பாடப் புத்தகங்களை மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உரையாடல் வடிவிலும், காட்சி வடிவிலும் மாற்றித் தருவது இதன் சிறப்பம்சமாகும்.
விருப்பத்திற்கேற்ற கற்றல்
பாடப் புத்தகங்களில் உள்ள நீண்ட கட்டுரைகளைப் படிப்பது பல மாணவர்களுக்குச் சலிப்பைத் தரக்கூடும். இதைக் கருத்தில் கொண்டு, கூகுளின் இந்த புதிய ஏஐ கருவி, பாடங்களை மாணவர்களின் தரம் மற்றும் அவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டு, உணவு அல்லது தொழில்நுட்பம் சார்ந்த உதாரணங்களுடன் விளக்குகிறது. இதன் மூலம் மாணவர்கள் ஒரு விஷயத்தை வெறும் மனப்பாடம் செய்யாமல், ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும்.
பலதரப்பட்ட வடிவங்கள்
பாடங்களை வெறும் எழுத்துக்களாக மட்டும் பார்க்காமல், மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான வடிவங்களில் கற்றுக்கொள்ளலாம். இதில் விரிவான உரைகள், ஆடியோ விளக்கங்கள், ஸ்லைடு அடிப்படையிலான பாடங்கள் மற்றும் ஒரு பாடத்தின் சாரத்தை எளிதில் புரியவைக்கும் மைண்ட் மேப்ஸ் (Mind Maps) எனப் பல வசதிகள் உள்ளன. மேலும், ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் மாணவர்கள் தங்களது புரிதலைச் சோதித்துப் பார்க்கப் பிரத்யேக வினாடி வினாப் போட்டிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
பயன்படுத்துவது எப்படி?
மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பாடப் புத்தகத்தைப் பிடிஎஃப் (PDF) வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பிறகு தங்களது வகுப்பு மற்றும் ஆர்வமுள்ள துறையைத் தேர்ந்தெடுத்து 'பர்சனலைஸ்' (Personalise) என்ற பொத்தானை அழுத்தினால், அந்தப் புத்தகம் அவர்களுக்குப் பிடித்தமான பாணியில் பாடங்களாக உருமாறி விடும்.
ஆய்வில் நிரூபிக்கப்பட்ட உண்மை
கற்றல் அறிவியலின் டூயல் கோடிங் (Dual Coding) தத்துவத்தின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதுடைய 60 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், வழக்கமான புத்தகங்களைப் படித்தவர்களை விட, இந்த ஏஐ கருவியைப் பயன்படுத்திய மாணவர்கள் 40 நிமிடங்களிலேயே பாடங்களை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் யுகத்தில் மாணவர்களின் கற்றல் முறையையே மாற்றியமைக்கும் ஒரு புரட்சிகரமான முயற்சியாகக் கூகுளின் இந்த 'லேர்ன் யுவர் வே' பார்க்கப்படுகிறது. தற்போது இது ஒரு சோதனை முயற்சியாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.