அகில இந்திய அளவில் முதுகலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான GATE- (Graduate Aptitude Test in Engineering) க்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஆக.28) தொடங்கி உள்ளது.
இந்த கேட் தேர்வு, இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) மற்றும் பிற முன்னணி பொறியியல் கல்வி நிறுவனங்களில் முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு ஆகும்.
முக்கிய நாட்கள் மற்றும் விவரங்கள்
- விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: ஆகஸ்ட் 28, 2025
- விண்ணப்பப் பதிவு முடியும் நாள்: செப்டம்பர் 28, 2025
- தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 9, 2025
- தேர்வு நடைபெறும் நாட்கள்: பிப்ரவரி மாதம், 2026
- தேர்வு முடிவுகள்: மார்ச் 19ஆம் தேதி, 2026 எனினும் இந்தத் தேதிகள் அனைத்திலும் மாற்றம் இருக்கலாம் என்று ஐஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவினருக்கு ரூ. 2,000 மற்றும் பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு ரூ. 1,000. இவர்களுக்கான தாமதக் கட்டணம் முறையே 2,500 ரூபாயாகவும் 1, 500 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம்
கேட் தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக (CBT) நடத்தப்படும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வில், பொறியியல் மற்றும் அறிவியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். பொதுவாக, பொதுத் திறன் (General Aptitude) பிரிவில் 15% கேள்விகளும், மீதமுள்ள 85% கேள்விகள் தேர்வு செய்யப்பட்ட பாடப்பிரிவில் இருந்தும் வரும்.
இந்த ஆண்டு 30 பாடப் பிரிவுகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. மாணவர்கள் தங்களது விருப்பமான பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்?
பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை அல்லது அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தற்போது இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
- தேர்வர்கள் iitg.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
- முகப்புப் பக்கத்தில் இருக்கும் GATE 2026 பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- விண்ணப்பதாரர்கள் தங்களைப் பதிவு செய்ய வேண்டிய ஒரு புதிய பக்கம் திறக்கும்.
- முன்பதிவு முடிந்ததும், கணக்கில் உள்நுழையவும்.
- விண்ணப்பப் படிவத்தை நிரப்பி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
- சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்து உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கவும்.
- மேலும் தேவைக்கு அதன் அச்சிடப்பட்ட நகலை வைத்துக் கொள்ளலாம்.
2026 கேட் தேர்வு குறித்த முழு விவரங்களை https://gate2026.iitg.ac.in/doc/IB/GATE2026-IB-v22082025-1300.pdf என்ற அறிவிக்கையில் பெறலாம்.
தொலைபேசி எண்: +91 361 258 6500
இ மெயில் முகவரி: helpdesk.gate@iitg.ac.in
கூடுதல் விவரங்களுக்கு: gate2026.iitg.ac.in