செப்டம்பருக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பழைய ஓய்வூதியம் வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட ககன்தீப் சிங் பேடி குழு வரும் 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

Continues below advertisement

பிப்ரவரி 4ஆம் தேதி அமைக்கப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாக உறங்கிக் கொண்டிருந்த குழு, இப்போதாவது விழித்துக் கொண்டு பணி செய்ய தொடங்கவிருப்பது மனநிறைவளிக்கிறது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த ககன்தீப் சிங் பேடி குழு அமைக்கப்பட்டும் கூட, அக்குழு அதன் பணிகளை தொடங்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி கடந்த ஜூன் 22, ஆகஸ்ட் 6 ஆகிய தேதிகளில் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

கருத்துக் கேட்புக் கூட்டங்கள்

மேலும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் நான் மேற்கொண்டு வரும் நடைபயணத்தின் போதும் ஒவ்வொரு நாளும் இந்த சிக்கல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். இதனால் ஏற்பட்ட அழுத்தங்களின் காரணமாகத்தான் அரசு விழித்துக் கொண்டு ககன்தீப் சிங் பேடி குழு கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தும் என்று அறிவித்திருக்கிறது. அந்த வகையில் இது பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி ஆகும். கருத்துக்கேட்புக் கூட்டங்கள் அடுத்த மாதம் 9ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அரசுத் தரப்பில் நடத்தப்பட வேண்டிய கலந்தாய்வுப் பணிகளையும் முடித்து செப்டம்பர் மாத மத்திக்குள் ககன்தீப் சிங் பேடி குழு அதன் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

அதனடிப்படையில் செப்டம்பர் மாத இறுதிக்குள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.