தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தில் 25% ஒதுக்கீட்டின்‌ கீழ் இலவச மாணவர் சேர்க்கை பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று மெட்ரிகுலேஷன்‌ பள்ளிகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ளது. 


மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்ந்து படிக்கலாம். இந்தத் திட்டத்தில் எல்.கே.ஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தமிழகத்தில் 2013-ம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.


இதுகுறித்து மெட்ரிகுலேஷன்‌ பள்ளிகள்‌ இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


’’குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாயக்‌ கல்வி உரிமைச்‌ சட்டம்‌, 2009, சட்டப்பிரிவு 12(1) (சி)- ன்படி 2022 - 2023ஆம்‌ கல்வியாண்டிற்கு 25%  ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழத்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதிப்‌ பள்ளிகளில்‌ நுழைவு நிலை வகுப்பில்‌ (எல்கேஜி அல்லது முதல்‌ வகுப்பு) சேர விண்ணப்பிக்கலாம். 


அதாவது பள்ளி எந்த வகுப்பில்‌ ஆரம்பிக்கிறதோ, அந்த வகுப்பில்‌ சேர்க்கைக்கு 20.04.2022 முதல் 18.05.2022 வரை, https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌.


18.05.2022 வரை பெறப்படும்‌ விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள்‌ சார்ந்த விவரங்களும்‌, விண்ணப்பம்‌ நிராகரிக்கப்பட்டிருப்பின்‌ அதற்கான காரணங்கள்‌ இணையதளத்திலும்‌, சம்பந்தப்பட்ட பள்ளித்‌ தகவல்‌ பலகையிலிலும்‌ 21.5.2022 அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்‌.


மேற்காண்‌ திட்டத்தின்‌ கீழ்‌ எல்கேஜி வகுப்பிற்கு விண்ணப்பிக்கும்‌ குழந்தைகள்‌ 01.08.2018 முதல்‌ 31.07.2019-க்குள்ளும்‌, ஒன்றாம்‌ வகுப்பிற்கு விண்ணப்பிக்கும்‌ குழந்தைகள்‌ 01.08.2016 முதல்‌ 31.07.2017-க்குள்ளும்‌ பிறந்திருக்க வேண்டும்‌.





விண்ணப்பதாரர்கள்‌ கீழ்க்கண்ட சான்றிதழ்களை உரிய அலுவலரிடம்‌ பெற்று பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌.


1. பிறப்புச் சான்றிதழ்‌.


2. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்‌ கீழ்‌ விண்ணப்பிக்க சாதிச்‌ சான்றிதழ்‌


3. வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினர்‌ கீழ்‌ விண்ணப்பிக்க உரிய சான்றிதழ்‌


4. நலிவடைந்த பிரிவின்‌ கீழ்‌ விண்ணப்பிக்க பெற்றோரின்‌ ஆண்டு வருமானம்‌ ரூ.2 லட்சத்திற்கும்‌ கீழ்‌ உள்ள வருமானச்‌ சான்றிதழ்‌.


5. இருப்பிடச்‌ சான்று


பெற்றோர்கள்‌ இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும்‌ விண்ணப்பிக்கலாம்‌.


மேலும்‌, முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்,‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மைய அலுவலகங்களில்‌ கட்டணமின்றி விண்ணப்பிக்கத்‌ தக்க ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன’’.


இவ்வாறு மெட்ரிகுலேஷன்‌ பள்ளிகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண