தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 முதன்மை தேர்விற்கான இலவச காணொலிப் பயிற்சி வகுப்புகள் நாளை மறுநாள் (ஜூலை 24) தொடங்க உள்ளதாக அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி கூறி உள்ளதாவது:
’’தமிழ்நாடு அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி தனது AIM TN என்ற யூடியூப் சானல் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச இணையதள வகுப்புகளை (online classes) நடத்தி வருகிறது. கிராமப்புறங்களில் வசிப்போரும், பொருளாதாரத்தில் பின்தங்கியோரும், தமிழ் வழிக் கல்வி பயின்றோரும் இதன் மூலம் பயன்பெற்று அரசுப் பணிகளில் அமர வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
முதல் முயற்சியாக கடந்த ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான இணையதள வகுப்புகளை அறிமுகப்படுத்தியது. 100 மணி நேரக் காணொலிகள் மூலம் 60 நாட்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த இணையதள வகுப்புகளுக்குக் கிடைத்த பெரும் வரவேற்பு காரணமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வு (TNPSC-GROUP-II), மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய எம்.டி.எஸ். தேர்வு (SSC-MTS), தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் நடத்தவிருக்கிற சார்பு காவல் ஆய்வாளர்களுக்கான தேர்வு (TNUSRB-SI) ஆகியவற்றிற்கு வேறுபட்ட பயிற்சிகளையும், மாதிரித் தேர்வுகளையும் நடத்தியுள்ளது.
நோக்கம் செயலி
இக்கல்லூரியின் நோக்கம் (NOKKAM) என்ற செயலி மாணவ / மாணவியர்களுக்கு பேருதவியாக இருக்கிறது. போட்டித் தேர்வுகளுக்கென்றே பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலியின் மூலம் மாணவ / மாணவியர்கள் மாதிரித் தேர்வுகளை எழுதலாம், பாடம் தொடர்பான காணொலிகளைக் காணலாம், பாடக் குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த இணையதள வகுப்புகள் அனைத்தும் போட்டித் தேர்வுகளை எழுத இருக்கும் ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தக் யூடியூப் சானலில் குறுகிய காலத்தில் சுமார் 1,53,000 ஆர்வலர்கள் இதுவரை இணைந்துள்ளனர்.
வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவிருக்கும் குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்தப் போட்டித் தேர்வை எழுத வேண்டுமென்றால் மாணவ / மாணவியர்கள் இப்போதிருந்தே தயார் நிலையில் இருக்க வேண்டும். எனவே, அவர்களுக்கு உதவும் முயற்சியாக அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி குரூப்-1 போட்டித் தேர்விற்கான இணையதள வகுப்புகளைத் தனது AIM TN YouTube சேனல் மூலம் ஆரம்பிக்கவுள்ளது.
மிஷன் 100 (Mission 100) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பயிற்சியில் நாளொன்றுக்கு மூன்று காணொலிகள் என்ற அளவில் சுமார் 180 காணொலிகள் அதற்கான பாடக் குறிப்புகளுடன் பதிவேற்றம் செய்யப்படும். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாணவ / மாணவியர்கள் 'நோக்கம்' செயலியின் மூலம் மாதிரித் தேர்வுகளை எழுதலாம். அவர்கள் எழுதிய தேர்வுகளுக்கான விடைகளை அவற்றிற்கான விவரக் குறிப்புகளுடன் சரி பார்த்துக்கொள்ளும் வசதியும் இந்தச் செயலியில் உள்ளது. அடுத்த நாள், அதாவது ஒவ்டுவாரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 2.30 மணிக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களுடன் ஆன்லைன் மூலம் நேரடித் தொடர்புகொண்டு சந்தேகங்களை நிவர்த்தியும் செய்து கொள்ளலாம்.
Mission 100 -இன் முதல் வகுப்பு 24.07.2023 அன்று காலை 8.00 மணிக்கு AIM TN YouTube சேனலில் தொடங்குகிறது’’.
இவ்வாறு அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி பயிற்சித்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.