என்ஐடி எனப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT) வாரங்கல், கேட் எனப்படும் முதுகலை பொறியியல் (GATE) நுழைவுத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கிறது.
என்ஐடி வாரங்கல் மற்றும் வாரங்கலைச் சுற்றியுள்ள பிற பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் இந்த இலவசப் பயிற்சியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயிற்சி விவரங்கள்:
- பயிற்சி தொடங்கும் தேதி: நவம்பர் 17, 2025
- பயிற்சி முடியும் தேதி: ஜனவரி 9, 2026
- பயிற்சிக் காலம்: 8 வாரங்கள்
- வகுப்பு நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
- பயிற்சி நடத்துவது யார்: NIT வாரங்கலின் SC-ST பிரிவு
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
அனைத்து கல்லூரிகளில் படிக்கும் பி.டெக். மூன்றாம் ஆண்டு அல்லது நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஆர்வமுள்ள மாணவர்கள் முன்பதிவு செய்து வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். எனினும் நேரடி வகுப்புகள் என்பதால், வாரங்கல்லைச் சுற்றியுள்ள மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
முக்கிய விதிகள் என்ன?
பயிற்சி வகுப்புகளில் மாணவர்களின் வருகை கட்டாயமாகும். தொடர்ந்து நான்கு வகுப்புகளைத் தவறவிடும் எந்தவொரு விண்ணப்பதாரரின் சேர்க்கையும் ரத்து செய்யப்படும்.
முக்கியத் தேதிகள் தெரியுமா?
- தேர்வு தேதிகள்: பிப்ரவரி 7, 8, 14 மற்றும் 15, 2026
- தேர்வு அமர்வுகள்: ஒவ்வொரு நாளும் இரண்டு அமர்வுகள் - காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மற்றும் பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை. மாணவர்கள் இதில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
- தேர்வு முடிவுகள் அறிவிப்பு: மார்ச் 19, 2026
- கேட் மதிப்பெண் செல்லுபடியாகும் காலம்: முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை.
எதற்காக கேட் தேர்வு?
GATE மதிப்பெண்களைப் பயன்படுத்தி, பொறியியல்/ தொழில்நுட்பம்/ அறிவியல்/ கட்டிடக் கலை/ மானுடவியல் போன்ற பிரிவுகளில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளில் சேர முடியும். மத்தியக் கல்வி அமைச்சகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. பல பொதுத்துறை நிறுவனங்களாலும் (PSUs) கேட் தேர்வு மதிப்பெண்கள் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன.