அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி, பிற அனைத்துப் பள்ளிகளுக்கும் காலை உணவுத்திட்டம் கொண்டு வரப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. கடலோரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 


நிதிநிலையைக் கருத்தில்கொண்டு அனைத்து மாவட்டங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.  


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில், கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தமிழ்நாடு முழுவதும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. 


மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, காலையில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி, குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் 1 முதல் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைந்தனர். 


அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம்


காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரித்தது தெரிய வந்தது. இதையடுத்து காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவ மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது


நிதி ஒதுக்கீடு


திட்ட விரிவாக்கத்திற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக இயங்கி வருகிறது.  


இந்நிலையில், அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி, பிற அனைத்துப் பள்ளிகளுக்கும் காலை உணவுத்திட்டம் கொண்டு வரப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்தவர் தொடுத்த பொதுநல வழக்கில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதில், ''தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய காலை உணவுத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும் தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு கிடைப்பதில்லை.  இதனைச் செயல்படுத்தினால் மீனவ குடும்பங்கள் பலன் பெறும். ஏனெனில் மீனவர்கள் அதிகாலையிலேயே எழுந்து கடலுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் கடலோர கிராமங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்ய, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது. 


இந்த வழக்கு நீதிபதி சுந்தர் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இதில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகித் தெரிவிக்கும்போது, ''எதிர்காலத்தில் அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி, பிற அனைத்துப் பள்ளிகளுக்கும் காலை உணவுத்திட்டம் கொண்டு வரப்படும். நிதிநிலையைக் கருத்தில்கொண்டு அனைத்து மாவட்டங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.