MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
TN Govt MBBS Seats: தமிழ்நாட்டில் 5 கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் இரண்டு அரசு மருத்துவ கல்லூரிகளில், கூடுதலாக தலா 50 மாணவர்கள் பயில்வதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

TN Govt MBBS Seats: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும், கூடுதலாக 50 மாணவர்களை சேர்ப்பதற்கான அனுமதியை தமிழ்நாடு அரசு எதிர்பார்க்கிறதாம்.
5 ஆண்டுகளில் முதல்முறை:
கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்கான அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ளது. அதன்படி, நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும், திருப்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும் தலா 50 மருத்துவ படிப்பு மாணவர்களை, 2026-27 கல்வி ஆண்டிலேயே சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு கல்லூரிகளிலும் ஒவ்வொரு ஆண்டிலும் புதியதாக மருத்துவ படிப்பிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை நூறிலிருந்து 150 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களுக்கான எண்ணிக்கை 5 ஆயிரத்து 150 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், நாட்டில் அரசு நிதியுதவியுடன் மருத்துவக் கல்வி வழங்கும் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா?
தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவ மதிப்பீடு மற்றும் தரமதிப்பீட்டு வாரியம்,2019-ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின் விதிகளின் கீழ், ஜூலை 10 அன்று இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கும் அனுமதிக் கடிதங்களை வழங்கியது. இவ்விரு கல்லூரிகளும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குவது குறிப்பிடத்தக்கது. இதுபோக, திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும், கூடுதலாக 50 மாணவர்களை சேர்ப்பதற்கான ஒப்புதலுக்காக அரசு காத்திருக்கிறதாம். நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டால், அது மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்கும் என்றும் மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசுப் பள்ளி மாணவர்கள் ஹாப்பி
கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு மாநிலம் முழுவதும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை நிறுவியது. அந்த ஆண்டின் பிற்பகுதியில், கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்களுக்கான ஒப்புதல் கிடைத்தது. அன்று முதல், அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையிலோ அல்லது அவற்றின் அனுமதிக்கப்பட்ட மாணவர் சேர்க்கையிலோ எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் 100 மருத்துவ இடங்கள் அதிகரித்து இருப்பது, தமிழ்நாட்டின் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர முயலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட்-யுஜி 2026 தகுதிப் புள்ளிகளின் அடிப்படையில் மாநிலத் தேர்வுக் குழுவால் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
திமுக முயற்சிகளையே எடுக்கவில்லையா?
கடந்த 5 ஆண்டுகளில் புதிய மருத்துவ கல்லூரிகள் எதுவும் நிறுவப்படாத நிலையில், இதற்காக திமுக எந்த முயற்சியும் எடுக்கவில்லையா? என பலருக்கும் கேள்வி எழலாம். ஆனால், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் இல்லாத பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் புதிய திட்டங்களை கொண்டுவர கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மாநிலங்கள் தன்னிச்சையாகப் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதைக் கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் தொகையின் அடிப்படையில் கடுமையான வரம்புகளையும் விதிமுறைகளையும் தேசிய மருத்துவ ஆணையம் அறிமுகப்படுத்தியது. இதனால் புதிய மருத்துவக் கல்லூரி வசதிகளை ஏற்படுத்த முடியவில்லை. அதேநேரம், தற்போது தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள 100 புதிய மருத்துவ இடங்களுக்கான பணிகளும், கடந்த திமுக ஆட்சி காலத்திலேயே தொடங்கப்பட்டது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்























