திருநங்கைகள் என்பது பெண் என்ற பால்வினை அடையாளத்துடன் வாழ விரும்பும் திருநடை (transgender) நபர்களை குறிக்கும் சொல். பெரும்பாலும் இவர்கள் பிறப்பில் ஆணாக பிறந்திருந்தாலும், தங்களது பாலின அடையாளத்தை பெண்ணாக உணர்ந்து வாழ்கிறார்கள். தமிழ்நாட்டில், "திருநங்கை" என்ற சொல் மரியாதையுடன் பயன்படுத்தப்படுகிறது.

Continues below advertisement

2019 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் நடைமுறையில் வந்த Transgender Persons (Protection of Rights) Act மூலம், திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதார சேவைகள் போன்ற பல முக்கிய உரிமைகள் உண்டாகின. தமிழ்நாட்டில் அரசு நிறுவிய திருநங்கை நல வாரியம் (Transgender Welfare Board) தேசிய அளவில் முதன்மையாகும்.

Continues below advertisement

தற்போது, திருநங்கைகள் பலரும் அரசுப் பணிகளில் (police, teacher, counselor)தனியார் நிறுவனங்களில், தொழில் முனைவோராக வெற்றிகரமாக தங்களை நிலைநாட்டி வருகிறார்கள். அவர்களின் கதைகள் ஊடகங்களில் மட்டும் அல்லாமல் சமூக ஊடகங்களிலும் மிகுந்த வரவேற்பைப் பெறுகின்றன. இதுவே அவர்களின் சமூக இடத்தை வலுப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கேரளாவில் திருநங்கை மாணவர்களுக்காக முதல்முறையாக தனிச்சிறப்பு விடுதி ஆகஸ்ட் 26ம் தேதி முதல் தொடங்கப்பட்டிருக்கிறது. கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட இந்த விடுதிக்கு 'வெம்பநாடு' என பெயரிடப்பட்டுள்ளது. கேரள மாநில சமூகநீதி அமைச்சர் ஆர்.பிந்து இதைத் தொடங்கிவைத்திருக்கிறார்.

திருநங்கை மாணவர்களில் பலர், தங்கள் வீடுகளிலிருந்து ஆதரவு பெற முடியாமல், வாடகை வீடுகளிலும், பாகுபாடு மற்றும் நிதி சிரமங்களால் தங்க முடியாமல் தவிக்கும் சூழலில் படித்து வருகின்றனர். அவர்களின் கல்வியை ஊக்கப்படுத்தவும், தங்கிப் படிப்பதற்கும் உதவியாக இவ்விடுதி அமைக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக சிறிய கட்டடமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த திருநங்கை மாணவர்களுக்கான தனிச் சிறப்பு விடுதி வரும் காலங்களில் பல கல்லூரி, பள்ளிகளில் விரிவுப்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்துப் பேசியிருக்கும் கேரள மாநில சமூகநீதி அமைச்சர் ஆர்.பிந்து, "திருநங்கை மாணவர்களுக்கென அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தனிச் சிறப்பு விடுதி வராலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். திருநங்கை மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதால், அவர்களுக்கென தனிச் சிறப்பு வசதி பெற்ற விடுதிகள் அவசியம். சமூகத்தால், குடும்பத்தால் கைவிடப்பட்ட அவர்களுக்கு இது போன்ற உதவிகள் கல்வி கற்பதற்கான நல்ல சூழலை ஏற்படுத்திக்கொடுத்து ஊக்கமளிப்பதாக இருக்கும்" என்று பேசியிருக்கிறார்.