கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ/ மாணவியர் சேர்க்கை தொடங்கி உள்ளது.
இதுகுறித்துக் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் அறிவித்து உள்ளதாவது:
’’தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இசைப் பள்ளிகள், நான்கு இடங்களில் இசைக் கல்லூரிகள், இரண்டு கவின் கலைக் கல்லூரிகள் மற்றும் ஒரு சிற்பக் கல்லூரி ஆகியவை செயல்படுகின்றன. இக்கல்வியகங்களில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான மாணவ/மாணவியர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
மாதாந்திர கல்வி உதவித் தொகை
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை (சீர்காழி), திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம். சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 17 மாவட்டங்களில் இசைப் பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் மூன்று ஆண்டு சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணாக்கர்கள் அரசு இசைக் கல்லூரியில் நேரடியாக மூன்றாம் ஆண்டில் டிப்ளமோ வகுப்பில் சேருவதற்கு அரசு அனுமதியளித்து ஆணையிட்டுள்ளது. இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.400/- கல்வி உதவித் தொகை அளிக்கப்படுகிறது.
சென்னை, கோயம்புத்தூர், திருவையாறு, மதுரை ஆகிய இடங்களில் அரசு இசைக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இக்கல்லூரிகளில் இசை, நாட்டியம் ஆகிய பிரிவுகளில் பட்டப் படிப்புகளும் மேற்காண் கலைகளோடு கிராமியக் கலைகளில்பட்டயப் படிப்புகளும் உள்ளன. இசைக் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு மாதம் ரூ.500/- கல்வி உதவித் தொகை அளிக்கப்படுகிறது.
சென்னை மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் செயல்படும் அரசு கவின் கலைக்கல்லூரிகளில் ஓவியக்கலை சார்ந்த பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளும், மாமல்லபுரத்தில் செயல்படும் அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் சிற்பக்கலையில் இளங்கலைப் பட்டம் மற்றும் கோவில் கட்டடக் கலையில் பி.டெக் படிப்புகளும் உள்ளன.
மாணவர் சேர்க்கை தொடக்கம்
இக்கல்வியகங்களில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டுக்கான சேர்க்கை (Admission) தொடங்கியுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள படிப்புகள் விவரம், வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி விவரங்களை www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். மேற்காண் ஏழு கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த இணையதளத்தின் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்’’ என கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் காந்தி தெரிவித்து உள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: www.artandculture.tn.gov.in