10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி முதல் ஜூலை 1 வரை சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அத்தோடு வாராந்திரத் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககமும் இணைந்து, ‘தொடர்ந்து கற்போம்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 13/5/2024 முதல் துணைத்தேர்வு நடைபெறும் நாள் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திர தேர்வுகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே பயிற்சி
பாடவாரியான ஆசிரிய வல்லுநர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல் கையேடு (MLM) மற்றும் வினாத்தாள் துணைத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இச்சிறப்பு பயிற்சி மையம், மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே நடைபெறும்.
இச்சிறப்பு பயிற்சி மைய வகுப்புகள் பாடம் சார்ந்த ஆசிரியர்களைக் கொண்டு, சுழற்சி முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும் மற்றும் சனிக்கிழமைகளில் வாராந்திரத் தேர்வு நடத்தவும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இச்சிறப்பு பயிற்சியில் பங்கு பெறும் மாணவர்களின் வருகைப் பதிவு மற்றும் வாராந்திர தேர்வு மதிப்பெண்கள், கல்வி தகவல் மேலாண்மையின் (EMIS) மூலம் கண்காணிக்கப்பட்டு தொடர்ந்து மாணவர்களை ஊக்குவித்து துணைத் தேர்வு எழுத அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
உதவி எண் மூலம் வழிகாட்டல்
பள்ளிக் கல்வித்துறையின் உதவி எண் 14417 மூலமாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி உரிய வழிகாட்டுதலுடன் தொடர்ந்து மாணவர்களை சிறப்புப் பயிற்சி மையத்தில் கல்வி கற்பதையும், துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க செய்து மற்றும் துணை தேர்வு எழுதும் வரை ஊக்குவிப்பதையும் உறுதி செய்யப்படும்’’.
இவ்வாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.