இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் ஜூலை 12ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்துகொள்ளலாம்.
5 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள்
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிலவரப்படி 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளது. எஞ்சிய இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளன.
அதேபோல், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 569 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கால அவகாசம் நீட்டிப்பு
எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். மருத்துவப் படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு ஜூன் 28ஆம் தேதி தொடங்கிய நிலையில், மாணவர்கள் ஜூலை 10ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மாணவர்க https://tnmedicalselection.net/ மற்றும் www.tnhealth.tn.gov.in ஆகிய இணைய முகவரிகளில் விண்ணப்பித்த நிலையில், விண்ணப்பிக்கக் கால அவகாசம் ஜூலை 12ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலருடன் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் அல்லது அரசு சேவை மையங்களுக்கு (Tamil Nadu Facilitation Centre) அனைத்து அசல் சான்றிதழ்களுடன் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரிகளுடன் உதவியுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஜூலை 3-வது வாரத்தில் கலந்தாய்வு
தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, கலந்தாய்வு ஜூலை 3-வது வாரத்தில் தொடங்கும். சிறப்பு பிரிவினர் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடியாகவும், பொதுக்கலந்தாய்வு ஆன்லைனிலும் நடைபெற உள்ளது.
தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு தேதிகள் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பக் கட்டணம்
டிசம்பர் 2023-க்குள் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்துக்கான கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களையும் சரியாகப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து, சமர்ப்பிக்க வேண்டும்.
சிறப்புப் பிரிவினரில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளும் மாற்றுத் திறனாளிகளும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதே நேரத்தில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் நேரடியாகவும் ஆன்லைனிலும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த மாணவர்கள்,
செயலாளர், தேர்வுக் குழு,
மருத்துவக் கல்வி இயக்ககம்,
162, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம், சென்னை-600 010 என்ற முகவரிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
நீட் தேர்வில் தமிழக அளவில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மொத்தம் 10,385 இடங்கள் உள்ள நிலையில் மருத்துவ இடம் பெறுவதில் மாணவர்களிடையே பெரும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.