யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2026-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு மற்றும் இந்திய வனப் பணித் தேர்வு ஆகியவற்றில், தேர்வர்களுக்கான அணுகுமுறையை எளிதாக்கவும், தேர்வுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல தொழில்நுட்ப வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டு, விண்ணப்பப் பதிவு நடந்து வருகிறது. தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் பிப்ரவரி 24 வரை தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இத்தேர்வுகளின் மூலம் சிவில் சர்வீசஸ் பிரிவில் 933 காலியிடங்களும், இந்திய வனப் பணிப் பிரிவில் 80 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
புதுப்பிக்கப்பட்ட ஆன்லைன் இணையதளம்
செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் தேர்வர்களின் வசதியை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் தேர்வுகளை நடத்தவும் மேம்பட்ட ஆன்லைன் விண்ணப்ப இணையதளத்தை யுபிஎஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளம், தேர்வர்களுக்கான விண்ணப்ப முறையையும் எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான சீர்திருத்தம்
யுபிஎஸ்சியின் மிகமுக்கியமான சீர்திருத்தங்களில் ஒன்று, நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் (PwBD) தொடர்பானது; குறிப்பாக தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி, "திருத்தப்பட்ட நடைமுறையின்படி, மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான தேர்வு மையங்களின் இட கொள்ளளவுக்கு எவ்வித உச்ச வரம்பும் இருக்காது. ஒவ்வொரு மையத்தின் தற்போதைய கொள்ளளவு மாற்றுத்திறனாளி மற்றும் மாற்றுத்திறனாளி அல்லாத தேர்வர்களால் நிரப்பப்படும். ஒரு மையம் முழுவதுமாக நிரம்பியவுடன், மாற்றுத்திறனாளி அல்லாத தேர்வர்களால் அந்த மையத்தைத் தேர்ந்தெடுக்க முடியாது.
ஆனால், மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தொடர்ந்து அதே மையத்தைத் தேர்ந்தெடுக்கும் வசதி இருக்கும். எந்தவொரு மாற்றுத்திறனாளி தேர்வருக்கும், அவர் விரும்பும் தேர்வு மையம் மறுக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்ய, தேவைப்படும் இடங்களில் கூடுதல் இடவசதி உருவாக்கப்படும்" என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கான காரணத்தை விளக்கிய யுபிஎஸ்சி தலைவர் டாக்டர் அஜய் குமார், "இந்தத் திருத்தப்பட்ட நடைமுறையின் மூலம், ஒவ்வொரு மாற்றுத்திறனாளி தேர்வருக்கும் அவர்கள் விரும்பும் தேர்வு மையம் கிடைப்பது உறுதி செய்யப்படும். இதனால் அவர்கள் யுபிஎஸ்சி தேர்வுகளை எழுதுவது மிகவும் எளிதாகவும் வசதியாகவும் அமையும்" என்று தெரிவித்தார்.
தேர்வு மையங்களின் விரிவாக்கம்
அதிக தேவை உள்ள மையங்களின் மீதான சுமையைக் குறைக்க, யுபிஎஸ்சி தனது தேர்வு மையங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தியுள்ளது. டெல்லி- என்சிஆர் பகுதியில் நெரிசலைக் குறைக்க மீரட், லக்னோவைச் சுற்றியுள்ள இடங்கள் மீதான தேவையைக் குறைக்க கான்பூர் மற்றும் கட்டாக் நகருக்கு அருகிலுள்ள மையங்களுக்கு உதவ புவனேஸ்வர் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த புதிய சேர்க்கைகளுடன், முதல்நிலைத் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 80-லிருந்து 83-ஆக அதிகரித்துள்ளது. முதன்மைத் தேர்வைப் பொறுத்தவரை, மையங்களின் எண்ணிக்கை 24-லிருந்து 27 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் புவனேஸ்வர், ஸ்ரீநகர் மற்றும் இம்பால் ஆகியவை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய தேர்வு மையம் அமைக்கப்படுமா?
புதுப்பிக்கப்பட்ட விண்ணப்ப இணையதளத்தில் தேர்வு மைய முன்னுரிமை தொடர்பான புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மையங்களைத் தேர்ந்தெடுப்பதோடு மட்டுமல்லாமல், தேர்வர்கள் தங்களுக்கு அருகிலுள்ள விருப்பமான நகரங்களை டிராப்-டவுன் பட்டியல் மூலம் குறிப்பிட வேண்டும். இந்தத் தரவுகள் தேர்வர்களின் விருப்பங்களை அறியும் கணக்கெடுப்பாகச் செயல்படும். மேலும், சாத்தியமான இடங்களில் புதிய தேர்வு மையங்களை அமைப்பதற்கான இடங்களைக் கண்டறிய இது பயன்படுத்தப்படும்.
தொழில்நுட்பம் சார்ந்த அடையாளச் சரிபார்ப்பு
தேர்வின் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்த, புதிய இணையதளத்தில் தொழில்நுட்பம் சார்ந்த புகைப்படச் சரிபார்ப்பு மற்றும் முக அங்கீகார வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தேர்வு முறையின் பல்வேறு கட்டங்களில் அடையாளச் சரிபார்ப்பை மேம்படுத்தி, மிகவும் உறுதியான மற்றும் வெளிப்படையான அமைப்பை உருவாக்க உதவும்.
தேர்வர்களின் வசதி மற்றும் பங்கேற்பை எளிதாக்குவதில் அதிக கவனம் செலுத்தும் அதே வேளையில், தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வுகள் நடைபெறுவதையும் இந்த சீர்திருத்தங்கள் உறுதி செய்யும் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.