தமிழ்நாடு நாள் ஆன ஜூலை 18 அன்று பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மாநில அளவில் நடைபெற்று, பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சி இயக்குநர் தெரிவித்து உள்ளதாவது:
’’தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாள் "தமிழ்நாடு நாளாக" கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்தார். இந்த அறிவிப்பிற்கு இணங்க 2022ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக கொண்டாடப் பெற்று வருகிறது.
சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு
தமிழ்நாடு நாள் விழா தொடர்பில் அனைத்து மாவட்டங்களிலும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி முதல் மூன்று பரிசுகள் மாவட்ட அளவில் வழங்கப் பெறுகிறது. அத்துடன் முதல் பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெறுவர்.
சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடம் வகிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 18 ஆம் நாளன்று நடைபெறும்தமிழ்நாடு நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்று வருகிறது.
சென்னை மாவட்ட அளவில் நடைபெறும் மாவட்டப் போட்டிகள் 09.07.2024 அன்று சென்னை, அண்ணாசாலையில் அரசினர் மதரசா ஐ ஆஜம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.
முதல் பரிசு ரூ.10,000
இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், முதல் பரிசு ரூ.10,000/- இரண்டாம் பரிசு ரூ.7,000/-, மூன்றாம் பரிசு ரூ.5,000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப் பெறுவர்.
போட்டிகளுக்கான தலைப்புகள்
கட்டுரை- ஆட்சிமொழி தமிழ்
பேச்சுப் போட்டி
1. குமரி தந்தை மார்ஷல் நேசமணி
2. தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா
3. முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி.
இதில் திரளான மாணவர்கல் கலந்துகொள்ள வேண்டும். ’’
இவ்வாறு தமிழ் வளர்ச்சி இயக்குநர் தெரிவித்துள்ளார்.