தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவித்துள்ளது. இதற்கு ஜூலை 17ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறி உள்ளதாவது:

''ஆகஸ்ட்‌ 2025-ல்‌ நடைபெறவுள்ள தனித்‌ தேர்வர்களுக்கான எட்டாம்‌வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.08.2025 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித்‌ தேர்வர்கள்‌ 17.07.2025 (வியாழக்கிழமை) வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) இவ்வலுவலக இணையதளத்தில்‌ குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு சென்று ஆன்லைன்‌ மூலம்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌. மேற்காண்‌ தேதிகளில் விண்ணப்பிக்கத்‌ தவறியவர்கள்‌ 18.07.2025 மற்றும்‌ 19.07.2025 ஆகிய இரு நாட்களில்‌ தட்கல்‌ முறையில்‌ தேர்வுக்‌ கட்டணத்துடன்‌ கூடுதலாக ரூ.500/- செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்‌.

இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும்‌ முறை :

மேற்படி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தனித்தேர்வர்கள்‌ தேர்வர்‌ வசிக்கும்‌ இருப்பிடத்திற்குட்பட்ட கல்வி மாவட்டத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்திற்குச்‌ சென்று விண்ணப்பங்களைப்‌ பதிவேற்றம்‌ செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. விண்ணப்பிக்கச்‌ செல்லும்‌போது விண்ணப்பதாரர்கள்‌ குறைந்தபட்ச கல்வித்‌ தகுதிக்கான சான்றிதழின்‌ நகலினை கண்டிப்பாக எடுத்துச்‌ செல்ல வேண்டும்‌. தனித்தேர்வர்கள்‌ சேவை மையத்துக்கு நேரடியாகச்‌ சென்று விண்ணப்பத்தினை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அங்கு பொருத்தப்பட்டுள்ள கணினி புகைப்படக்‌ கருவிகள்‌ வெப் கேமரா மூலமாக புகைப்படம்‌ எடுக்கும்‌ வசதி செய்யப்பட்டுள்ளதால்‌, அம்மையங்களிலேயே புகைப்படத்துடன்‌ கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம்‌ செய்து கொண்ட பின்னர்‌, அங்கேயே தேர்வுக்கட்டணம்‌ செலுத்தவும்‌ வசதி செய்யப்பட்‌டுள்ளது.

எந்த முன்னறிவிப்பும்‌ இன்றி நிராகரிக்கப்படும்‌

Online மூலம்‌ விண்ணப்பித்தவர்கள்‌ மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்‌. தபால்‌ மூலம்‌ அனுப்பப்படும்‌ விண்ணப்பங்கள்‌ எந்த முன்னறிவிப்பும்‌ இன்றி நிராகரிக்கப்படும்‌.

 விண்ணப்பிக்கத்‌ தேவையான குறைந்தபட்ச கல்வித்தகுதி

 1. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை. (No Minimum educational Qualification)

 2. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில்‌ 8 ஆம்‌ வகுப்பிற்கும்‌ கீழ்‌ படித்து இடையில்‌ நின்ற 12 1/2 வயது பூர்த்தி அடைந்தவர்களும்‌ இத்தேர்விற்கு தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்‌.

விண்ணப்பத்துடன்‌ இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்‌

 1. நோடித்‌ தனித்தேர்வர்கள்‌: (முதன்முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்‌) நேரடித்‌ தனித்தேர்வர்கள்‌ ஆன்லைன்‌ விண்ணப்பத்துடன்‌ சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச்‌ சான்றிதழ்‌ நகல்‌ / பள்ளிப்‌ பதிவுத்தாள்‌ நகல்‌ / பிறப்புச்‌ சான்றிதழ்‌ நகல்‌ இவற்றில்‌ ஏதேனும்‌ ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்‌.

2. தோல்வியுற்ற பாடங்களை தற்போது தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்‌ ஏற்கனவே தேர்வெழுதி பெற்ற சான்றிதழ்களின்‌ நகல்களை கண்டிப்பாக விண்ணப்பத்துடன்‌ இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்‌.

 தேர்வுக்‌ கட்டண விவரம்‌

10.07.2025 முதல்‌ 17.07.2025 வரை கீழ்க்குறிப்பிட்ட தொகையை செலுத்தி விண்ணப்பிக்கலாம்‌. இத்தேதிகளில்‌ விண்ணப்பிக்கத்‌ தவறியவர்கள்‌ 18.07.2025 மற்றும்‌ 19.07.2025 ஆகிய இரு நாட்களில்‌ தட்கல்‌ முறையில் விண்ணப்பிக்கலாம்‌.

தேர்வுக்‌ கட்டணத்தினை சேவை மையத்தில்‌ (Nodal Center) நேரில்‌ பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌. தட்கலில்‌ விண்ணப்பிக்க உள்ள தேர்வர்கள்‌ தேர்வுக்‌ கட்டணத்துடன்‌ தட்கல்‌ விண்ணப்ப கட்டணத்‌ தொகை ரூ.500/- ஐ செலுத்த வேண்டும்‌.

தேர்வெழுத விரும்பும்‌ மொழி

தேர்வர்‌ தேர்வெழுத விரும்பும்‌ மொழியை கண்டிப்பாக விண்ணப்பத்தில்‌ குறிப்பிட வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது‌.