தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் குழந்தைகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் 2023-2024 கல்வியாண்டுக்கான இறுதி பருவத் தேர்வுகள் மீது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேசமயம் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் பிரிவு 12(1) (சி) கீழ் சிறுபான்மை அல்லாத அனைத்து தனியார் பள்ளிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி அல்லது 1 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 25 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.
இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவ - மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை பள்ளிக் கல்வித்துறையே செலுத்தும். இந்த நிலையில் 2024-2025 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று (ஏப்ரல் 22) முதல் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக rte.tnschools.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒருமாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் கடைசி நாளாக மே 20 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் விண்ணப்பித்தவுடன், பதிவு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் அவர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகளவில் விண்ணப்பங்கள் வந்திருக்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த திட்டத்தில் தமிழகத்தில் உள்ள சுமார் 7,700க்கு மேல் உள்ள பள்ளிகளில் கிட்டதட்ட 85 ஆயிரம் இடங்கள் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகிறது.
மாணவர்களின் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை நகல், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய கையில் வைத்திருக்க வேண்டும், இதற்காக அரசு இ-சேவை மையங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: TN 10th 12th Result 2024: 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்