எண்ணும் எழுத்தும் திட்டத்தை, கல்வியியல் கல்லூரி மாணவர்களைக் கொண்டு 3ஆம் நபர் மதிப்பீடு செய்யும் திட்டத்துக்கு, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் (எஸ்சிஇஆர்டி), உயர் கல்வித்துறை இயக்குனருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா பெருந்தொற்றினால் மாநில அளவில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய, 2022 - 2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி 2025 ஆம் கல்வி ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு பெற வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும் திட்டமானது 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப் பட்டது. 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் இருந்து 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்களைக் கொண்டு தர மதிப்பீடு
எண்ணும் எழுத்தும் திட்டம் அனைத்துப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் நபர் மதிப்பீடு (Third Party evaluation) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இம்மதிப்பீட்டினை மேற்கொள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்வியியல் (பி.எட்.) கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டியுள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் படிக்கும் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களை Third Party evaluation பணியில் மதிப்பீட்டாளராக (Enumerators) செயல்பட அனுமதி வழங்க வேண்டும்.
மேலும். இம்மாணவர்களுக்கு மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கான பயிற்சி அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் இன்று (28.08.2023) முதல் 31.08.2023 வரை இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளது.
செப்டம்பரில் கள ஆய்வுப் பணி
பள்ளிகளில் கள ஆய்வுப் பணியானது 04.09.2023 முதல் 15.09.2023 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மேற்காண் தேதிகளில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்வியியல் (பி.எட்.) கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை உரிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் கோரும் தேவையான எண்ணிக்கையின் அடிப்படையில் உரிய நாட்களில் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். விடுவித்து, இப்பணியில் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் (எஸ்சிஇஆர்டி) தெரிவித்து உள்ளார்.
எனினும் இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எண்ணும் எழுத்தும் திட்டத்தினை மூன்றாவது நபர் மதிப்பீடு (Third party evaluation) செய்யும் முறையினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளரும் தனிக்கவனம் மேற்கொண்டு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.