பொறியியல் மாணவர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நாளை (ஜூலை 22) தொடங்க உள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்தாய்வைத் தொடங்கி வைக்க உள்ளார். 


7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு முதலில் தொடங்குகிறது. நாளை (ஜூலை 22) காலை 10 மணிக்கு, மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோருக்குக் கலந்தாய்வு தொடங்குகிறது.


மாற்றுத் திறனாளிகள் பிரிவில் தகுதிவாய்ந்த தேர்வர்கள் (7.5% இட ஒதுக்கீட்டின்கீழ்)- 111. எனினும் இந்தப் பிரிவில் 664 இடங்கள் உள்ளதால் எல்லோருக்கும் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கான தகுதியான தேர்வர்கள் (7.5% இட ஒதுக்கீட்டின்கீழ்)- 282 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 38 இடங்கள் உள்ளன.


முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 11 இடங்கள் உள்ள நிலையில், 11 மாணவர்கள் தகுதிவாய்ந்தவர்களாக உள்ளனர். ஜூலை 23ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடக்கிறது.


கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒட்டுமொத்தமாக 1,99,868 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10 அன்று வெளியானது.  அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் சேலத்தைச் சேர்ந்த ரவணி என்னும் மாணவி, 199.5 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். கோவை மாணவி கிருஷ்ணா அனூப் 198.50 கட் ஆஃப் உடன் 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல வேலூர் மாணவர் சரவணன் 198.5 கட் ஆஃப் உடன் 3ஆவது இடத்தைப் பெற்று இருந்தார்.


கலந்தாய்வு தேதிகள் என்னென்ன?


தொடர்ந்து பொதுப் பிரிவு சிறப்புப் பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளி, முன்னாள் படை வீரர், விளையாட்டு வீரர்) கலந்தாய்வு ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்தக் கலந்தாய்வுகள் அனைத்தும் இணைய வழியிலேயே நடக்கின்றன.


ஜூலை 29 முதல் பொதுக் கலந்தாய்வு


தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான பொதுக் கலந்தாய்வு ஜூலை 29 முதல் செப்டம்பர் 3 வரை நடக்கிறது. துணைக் கலந்தாய்வு செப். 6 முதல் 9ஆம் தேதி நடைபெற உள்ளன.


எஸ்சி அருந்ததியர் மாணவர்களுக்கான காலியிடத்தை எஸ்சி மாணவர்களுக்கு மாற்றும் கலந்தாய்வு செப்.10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 11ஆம் தேதியோடு கலந்தாய்வு முடிவு பெறுகிறது.


கூடுதல் விவரங்களுக்கு: https://www.tneaonline.org/