பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போது 2-ம் சுற்று கலந்தாய்வில் தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு 1,58,157 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது. 1.48 லட்சம் பொறியியல் இடங்களுக்கு 1.58 லட்சம் விண்ணப்பங்கள் தகுதி பெற்றன. இதனால் விண்ணப்பிப்போரில் பெரும்பாலும் அனைவருக்குமே இடம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல் வெளியானது.
குறிப்பாக OC- 7615, BC- 74,605, BCM - 7,203, MBC- 42,716, SC- 21,723, SCA- 3 ஆகிய பிரிவில் மாணவர்கள் விண்ணப்பித்தனர். எனினும் இந்த ஆண்டு மாணவர்களுக்கான கட் -ஆஃப் மதிப்பெண்கள் அதிகரித்தன. 200க்கு 200 கட் -ஆஃப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 10 ஆக மட்டுமே இருந்த நிலையில், இந்த முறை 133 பேர் 200க்கு 200 கட் -ஆஃப் பெற்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10,900 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 22,587 பேரின் விண்ணப்பங்கள் தகுதி பெற்றன
யார், யாருக்கு எந்த வரிசையில் கலந்தாய்வு?
முதலில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு சிறப்புக் கலந்தாய்வு ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதற்கிடையே நீட் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு முதல் சுற்று கலந்தாய்வு தொடங்கப்பட்டது. இந்தக் கலந்தாய்வில், 13 ஆயிரத்து 893 விண்ணப்பதாரர்கள் விருப்ப இடங்களைத் தேர்வு செய்து இருந்தனர். அவர்களில் 12 ஆயிரத்து 996 பேருக்கு தற்காலிக இட ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. அதில் 5 ஆயிரத்து 887 பேர் இடங்களை உறுதி செய்து கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர்.
மேலும் 3 ஆயிரத்து 707 பேர் முதன்மை விருப்ப இடங்கள் கிடைக்கும் பட்சத்தில் ஏற்கனவே தேர்வு செய்திருந்த இடங்களில் இருந்து முன்னேறுவதற்கான வாய்ப்புக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உறுதி செய்திருந்த இடத்துக்கான கட்டணத்தை செலுத்தி இருக்க வேண்டும். அந்த வகையில் 3 ஆயிரத்து 707 பேரில், 3 ஆயிரத்து 46 பேருக்கு அவர்களின் முதன்மை விருப்ப இடங்களில் முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதன்படி, முதல் சுற்று கலந்தாய்வு முடிவில், 9 ஆயிரத்து 594 மாணவ மாணவிகள் தமிழகம் முழுவதும் உள்ள 446 பொறியியல் கல்லூரிகளில் தங்களுக்கு விருப்பமான படிப்புகளை தேர்வு செய்து சேர்ந்து இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து 2வது சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கியது.
2வது சுற்று கலந்தாய்வு
முதல் சுற்றுக் கலந்தாய்வைப் போலவே, இந்த சுற்றிலும் விருப்ப இடங்களைத் தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்குதல், முதன்மை விருப்ப இடங்களுக்காகக் காத்திருத்தல், இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுதல் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளன. 2வது சுற்று கலந்தாய்வுக்கு சுமார் 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டனர். அவர்கள் ஆன்லைனில் இருந்தபடியே இந்த கலந்தாய்வில் விருப்ப இடங்களைத் தேர்வு செய்யலாம்.
இந்நிலையில் 2-ம் சுற்றுக் கலந்தாய்வில் தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களின் லாகின் மூலம் நாளை (செப்.29ஆம் தேதி) மாலை 5 மணிக்குள் ஒதுக்கீட்டில் ஏதேனும் ஒரு தெரிவை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படாது.
24,163 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு
இரண்டு சுற்றுக் கலந்தாய்வுகளிலும் மொத்தம் 24,163 பேருக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 1,701 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தற்காலிக ஒதுக்கீட்டு இடங்களை நாளை மாலைக்குள் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் கோரிக்கை விடுத்துள்ளது.