மாணவர்கள் பெரும்பாலும் படிக்கும் விஷயங்களைக் கவனம் செலுத்துவதிலும், நினைவில் கொள்வதிலும் சிரமப்படுகிறார்கள். உடற்பயிற்சி நியூரோட்ரோபிக் காரணிகளை வெளியிடுவதைத் தூண்டுகிறது, இது புதிய நரம்பு இணைப்புகளை உருவாக்க உதவுகிறது.
நினைவாற்றல், கற்றல் மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகமும் உடற்பயிற்சி நினைவாற்றலை அதிகரிக்க உதவும் என்று கூறியுள்ளது.
மாணவர்கள் தினமும் செய்யக்கூடிய சில எளிய பயிற்சிகள் இங்கே.
- ஏரோபிக் பயிற்சிகள் (Aerobic Exercises)
ஏரோபிக் பயிற்சிகள், கார்டியோ என்றும் அழைக்கப்படுகின்றன, இவை மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, நினைவாற்றலை மேம்படுத்த உதவுகின்றன. மாணவர்கள் தினமும் 20- 30 நிமிடங்கள் ஜாகிங், brisk வாக்கிங், சைக்கிள் ஓட்டுதல் அல்லது ஸ்கிப்பிங் செய்யலாம்.
படிக்கட்டுகளில் ஓடுவது அல்லது ஜம்பிங் ஜாக்ஸ் செய்வது போன்ற குறுகிய நேர செயல்பாடுகளும் விழிப்புணர்வு மற்றும் கற்றல் திறனில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
- எடை பயிற்சி (Weight Training)
பலம் பயிற்சி தசைகளை உருவாக்குவதற்கு மட்டுமல்ல; இது மூளைக்கும் நன்மை பயக்கும். புஷ்-அப்கள், ஸ்க்வாட்கள், lunges மற்றும் இலகுரக டம்பல்ஸ் பயன்படுத்துவது போன்ற எளிய பயிற்சிகள் உடல் வலிமையையும் மன செயல்திறனையும் மேம்படுத்துகின்றன, ஏனெனில் இது மூளைக்கு ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை பாய்ச்சுகிறது.
இது நியூரான்களின் வளர்ச்சிக்கும் உயிர்வாழ்விற்கும் உதவுகிறது (நியூரான் என்பது மூளைக்கும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இடையில் தகவல்களைக் கடத்தும் ஒரு செல்). 10- 15 முறை, 2- 3 செட் செய்வது மாணவர்களுக்கு படிக்கும்போது அதிக ஆற்றலையும் கவனத்தையும் ஈர்க்க உதவும்.
- எளிய தினசரி பயிற்சிகள் (Simple Daily Exercises)
சிறிய பயிற்சிகள்கூட உதவுகின்றன. காலையில் ஸ்ட்ரெச்சிங், கழுத்து மற்றும் தோள்பட்டை சுழற்சிகள், மற்றும் பந்தை வீசுவது போன்ற கை- கண் ஒருங்கிணைப்பு பயிற்சிகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கின்றன. யோகா ஆசனங்கள் மனதை அமைதிப்படுத்தி செறிவை மேம்படுத்துகின்றன.
வேறென்ன செய்யலாம்?
மாணவர்கள் இந்த பயிற்சிகளை குறுகிய படிப்பு இடைவெளிகள் மற்றும் போதுமான தூக்கத்துடன் சேர்த்து செய்ய வேண்டும். தண்ணீர் குடிப்பது மற்றும் பழங்கள், நட்ஸ் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகளை சாப்பிடுவது ஆகியவை மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
இவை அனைத்தையும் தினமும் குறைந்தது 30-45 நிமிடங்கள் முயற்சி செய்யுங்கள். இதைத் தவறாமல் செய்வதன் மூலம் நினைவாற்றல் அதிகரிக்கும், மன அழுத்தம் குறையும், மற்றும் ஒட்டுமொத்த கற்றல் மேம்படும். தினசரி சிறிய முயற்சிகள் கல்வி செயல்திறனில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.