தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புதிய இயக்குனராக நாகராஜ முருகன் நியமிக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து அரசு முதன்மைச்‌ செயலாளர்‌ காகலா உஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வியின் கூடுதல்‌ உதவி திட்ட இயக்குநர் எஸ்‌.நாகராஜ முருகன்‌ பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்‌.


மெட்ரிகுலேசன்‌ பள்ளிகள்‌ இயக்குநராகப்‌ பணியாற்றி வந்த கருப்பசாமி வயது முதிர்வின்‌ காரணமாக 31.10.2022 பிற்பகலில்‌ பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இதனைத்‌ தொடர்ந்து. 01.11.2022 முதல்‌மெட்ரிகுலேசன்‌ பள்ளிகள்‌ இயக்குநர்‌ பணியிடம் காலியானது. 


இதையடுத்து அந்த காலிப் பணியிடத்தில்  ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி  கூடுதல்‌ உதவி திட்ட இயக்குநர்‌, முனைவர்‌. எஸ்‌.நாகராஜ முருகன் அவர்களை பணியிட மாறுதல்‌ மூலம்‌ நியமன‌ம் செய்து அரசு ஆணையிடுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


*


புதுமைப் பெண் திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.1,000 வழங்கும் திட்டமான புதுமைப் பெண் திட்டத்துக்கு (Puthumai Penn Thittam) இன்று முதல் விண்ணப்பிக்கலாம். முன்னதாக இந்தத் திட்டம் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். புதுமைப்‌ பெண்‌ திட்டத்தில்‌ (Puthumai Pen Thittam) உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகள், நவம்பர்‌ 1 ஆம் தேதி முதல்‌ நவம்பர்‌ 11 ஆம்‌ தேதி வரை விண்ணப்பிக்கலாம்‌.


அரசுப் பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை படித்து, மேல்‌ படிப்பு/ தொழில்நுட்பப் படிப்பு பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌தோறும்‌ 1000 ரூபாய்‌ வழங்க இத்திட்டம் வழிவகை செய்கிறது. இதுவரை 2,3 மற்றும்‌ 4ம்‌ ஆண்டில்‌ பயிலும்‌ 1.13 லட்சம்‌ மாணவிகள்‌ இத்திட்டத்தில்‌ உதவித் தொகையை பெற்று பயன்‌ அடைந்துள்ளனர்.


தற்போது http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணைய தளத்தில் முதலாம்‌ ஆண்டு பயிலும்‌ மாணவிகளும்‌ விண்ணப்பிக்கலாம்‌.


இந்த வலைத்தளத்தில்‌, மாணவிகள்‌, அனைவரும்‌ சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்‌ வாயிலாக இன்று (நவம்பர்‌ 1 ஆம்‌ தேதி) முதல்‌ 11 ஆம்‌ தேதி வரை பதிவு செய்யலாம்‌. அரசு பள்ளிகளில்‌ பயின்ற மாணவிகள்‌ மட்டுமே இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள்‌, மாணவிகள்‌ தங்கள்‌ கல்வி நிறுவனங்கள்‌ மூலமாக மட்டுமே விண்ணப்பம்‌ செய்ய வேண்டும்‌. நேரடியாக விண்ணப்பிக்கக்‌ கூடாது.


இத்திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கும்‌ முறை மற்றும்‌ தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும்‌ கல்வி பயிலும்‌ நிறுவனங்களில்‌ நவம்பர்‌ 11 ஆம்‌ தேதி வரை சிறப்பு முகாம்கள்‌ நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.