அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் பணியிட மாறுதல், பதவி உயர்வு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அதுதொடர்பான அரசாணைகளும் வெளியாகி உள்ளன. 

Continues below advertisement

தமிழ்நாடு பள்ளிக்கல்வியின் கீழ் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்களுக்கான 2025-2026 ஆம் ஆண்டிற்கான முறையான தேர்ந்தோர் பெயர் பட்டியல், அரசாணையின்படி அரசளவில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

26 அலுவலர்களுக்கு பதவி உயர்வு

Continues below advertisement

இதன் தொடர்ச்சியாக முதன்மைக்கல்வி அலுவலர் / துணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் 11 அலுவலர்களுக்கு பணி மாறுதல் வழங்கியும், தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி விதிகளில் வகுப்பு IV இன் கீழ் உள்ள மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் 26 அலுவலர்களுக்கு பதவி உயர்வளிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணியில் வகுப்பு III ஐ சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர்/ துணை இயக்குநர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டு உள்ளது.

கூடுதல் பொறுப்பு அலுவலர்

 இவ்வகையில் மாறுதல் வழங்கப்பட்டுள்ள முதன்மைக்கல்வி அலுவலர்கள், தமது பொறுப்புகளை மூத்த மாவட்டக்கல்வி அலுவலரிடத்தில் ஒப்படைத்துவிட்டு உடனடியாக புதிய பணியிடத்தில் பணியில் சேரவேண்டும். முதன்மைக்கல்வி அலுவலர் / துணை இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ள மாவட்டக்கல்வி அலுவலர்கள், முதன்மைக்கல்வி அலுவலர்களால் நியமனம் செய்யப்படும் கூடுதல் பொறுப்பு அலுவலரிடம் தங்களது பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு புதிய பணியிடத்தில் உடனடியாக பணியில் சேரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் பதவி உயர்வு பெற்றுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் புதிய பணியிடத்தில் பணியில் சேர ஏதுவாக, கூடுதல் பொறுப்பு அலுவலராக மாவட்டத்தில் அரசு பணிபுரியும் உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களில் பணியில் மூத்தவரை தமது அளவிலேயே நியமனம் செய்து ஆணை வழங்கிவிட்டு விவரம் தெரிவிக்கும்படியும் தொடர்புடைய முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.

காலியாக இருந்த முதன்மைக் கல்வி அலுவலர் இடங்கள்           

மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் என்பது முக்கியமான ஒன்று. சுமார் ஓராண்டாக கிருஷ்ணகிரியிலும், ஆறு மாதங்களுக்கு மேலாக தேனி, திருப்பூர், தஞ்சை, மயிலாடுதுறையிலும், சில மாதங்களுக்கும் மேலாக நாகப்பட்டினம், நீலகிரி, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய இடங்களிலும் முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த நிலையில் இந்த பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலமாக, பணியிடங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன.

முன்னதாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள், தேர்வு முடிவுகளுக்கான அறிவிப்புகளும் வெளியானது குறிப்பிடத்தக்கது.