தமிழக அரசு பள்ளிக் குழந்தைகள் உடல்நலனில் விளையாட வேண்டாம் என்றும் பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தி உள்ளது. 


அண்மைக் காலமாக தமிழகத்தில் குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. சென்னையில் பன்றிக் காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 250-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதிக அளவிலான குழந்தைகளுக்குக் காய்ச்சல் பரவி வருகிறது. 


புதுச்சேரியில் பரவி வரும் ஃப்ளூ காய்ச்சல் காரணமாக 150 குழந்தைகள் உட்பட 192 பேர் சிகிச்சையில் உள்ளனர். காய்ச்சலில் எந்தவித வைரஸும் கண்டறியப்படாத நிலையில், அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு செப்.25ஆம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 


புதுச்சேரியைப் போல தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.


இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:


’’தமிழ்நாட்டில் சளிக் காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய்ப் பரவலைத் தடுக்க  சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.  3 நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடும்  என்று ஆறுதல் கூறுவது மட்டுமே போதுமானதல்ல!


காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியம்.  பள்ளிகளில் குழந்தைகள் நெருக்கமாக அமர்ந்திருப்பதாலும், ஒன்று கூடி விளையாடுவதாலும் காய்ச்சல் பரவுகிறது  என்பதை மருத்துவ வல்லுனர்கள் உறுதி செய்திருக்கின்றனர்!


புதுச்சேரியில் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் அங்கு குழந்தைகளிடையே காய்ச்சல் பரவுவது குறைந்திருக்கிறது.  தமிழ்நாட்டிலும் நோய்ப் பரவல் சங்கிலியை  உடைக்க வேண்டுமானால் பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிக்க வேண்டியது  அவசியமாகும்!


மாணவர்களுக்கு கல்வி அவசியம்; அவர்களின் உடல்நலனைக் காக்க வேண்டியது  மேலும் அவசியம். இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.  எனவே, 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்; மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்  என மீண்டும் வலியுறுத்துகிறேன்.’’


இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதற்கிடையே, தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார். இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய அவர், ''இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை தனித்து முடிவெடுக்க முடியாது. முதலமைச்சர், பொது சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துபேசி உரிய முடிவெடுப்பார்'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.


மேலும் வாசிக்க: Flu in Tamil Nadu: தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்; காரணம் என்ன? மருந்துகள், தடுப்பது எப்படி?