நீட் தேர்வையும் அதனை நடத்தும் பா.ஜ.க அரசையும் கண்டித்து தி.மு.க மாணவர் அணி ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து தி.மு.க. மாணவர் அணி செயலாளர் வீரமணி மேலும் தெரிவித்து உள்ளதாவது:

’’பாசிச பா.ஜ.க. அரசால் இந்தியா முழுவதும் திணிக்கப்பட்ட நீட் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் மோசடிகள் முறைகேடுகள் அம்பலப்பட்டு வருகிறன. கழக ஆட்சியில் நீட் தேர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு இரத்து செய்யப்படுவதாக அறிவித்ததிலிருந்து மறு தேர்வு அச்சத்தால் இந்தியா முழுவதும் 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு செத்து மடிகின்றனர்.

Continues below advertisement

இது பாசிச மோடி அரசால் நிகழ்த்தப்படும் பச்சைப் படுகொலையாகும். இத்தகைய நுழைவுத் தேர்வுகளையும் 'தகுதி'த் தேர்வுகளையும் ரத்து செய்யக் கோரி பாசிச மோடி அரசினை தி.மு கழகம் தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது.

இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்குவதா?

அதேபோல் ஒன்றிய பா.ஜ.க. அரசு மொழிவாரி மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதிலும், தாய்மொழியைத் துறக்கச் செய்து, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை மக்களிடையே திணித்து அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கும் சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறது. 2014-ஆம் ஆண்டு ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததிலிருந்தே, தமிழ்நாட்டில் வடமொழித் திணிப்பை கல்வி நிலையங்களில் பாடத்திட்டம் வழியாகவும் இதர பல்வேறு வகைகளிலும் செய்து வருகிறது.

தற்போது ஒன்றிய அரசுப் பள்ளிகளில் (CBSE) 9-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை சமஸ்கிருத மொழியைக் கற்க வேண்டும் எனும் திட்டத்தைச் செயல்படுத்திட ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத் துறை ஆணை பிறப்பித்துள்ளது. இதனைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.

ஜூன் 23 கண்டன ஆர்ப்பாட்டம்

எனவே, ஒன்றிய அரசின் இம்முயற்சிகளை தடுத்திட, கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்படி பா.ஜ.க. அரசின் நீட்தேர்வு மற்றும் இந்தி, சமஸ்கிருத திணிப்பை கண்டிக்கும் வகையிலும், அவற்றை ரத்து செய்ய வலியுறுத்தியும் தலைநகராம் சென்னை மாநகர், சைதையில் "கலைஞர் பொன்விழா வளைவு” அருகில், ஜூன் 23 (செவ்வாய்க் கிழமை) அன்று காலை 09.00 மணியளவில், தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

உயிர்க்கொல்லி நீட்தேர்வினை ஒழித்திடுவோம்!

வடமொழி திணிப்பை தடுத்திடுவோம்!

அண்ணா தந்த இருமொழி கொள்கையை போற்றிடுவோம்’’ என்று திமுக மாணவர் அணி தெரிவித்துள்ளது.