நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை ஆங்கிலம் மற்றும் பெரும்பாலான இந்திய மொழிகளில் வெளியிடுகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் தேர்வின்போதே வினாத்தாள் கசிந்ததாகவும் மிகப்பெரிய எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் லட்சக்கணக்கான மாணவர்ளின் குரலாய் ஒலிப்பேன் என்று நீட் விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


அரசியல் தலைவர்கள் நீட் தேர்வுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேர்வை நடத்திய தேசியத் தேர்வுகள் முகமை, நீட் தேர்வு நடத்தப்பட்ட விதம் குறித்து விளக்கம் அளித்தது. எனினும் நீட் தேர்வு குறித்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.


நீட் தேர்வின் ஆபத்தை அறிவித்த திமுக


இந்த நிலையில் நீட் தேர்வின் ஆபத்தை அறிவித்து, மிகப்பெரிய அளவில் பிரச்சாரத்தை முன்னெடுத்தது திமுகதான் என்றுதால் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ''நீட் தேர்வின் ஆபத்தை அறிவித்து, மிகப்பெரிய அளவில் பிரச்சாரத்தை முன்னெடுத்தது திமுகதான். ஆட்சிக்கு வந்தபிறகு, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இதன்மூலம் நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


குழுவின் அறிக்கை விரிவான தகவல் பகுப்பாய்வு மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்களின் கருத்து அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஏழைகளுக்கு எதிரான மற்றும் சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வின் தன்மையை அம்பலப்படுத்த இந்த அறிக்கை பல்வேறு மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அறிக்கை பரிந்துரைகளின்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டி, மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பில் உள்ளது.






ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை


சமீபத்திய செயல்பாடுகள் காரணமாக நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை ஆங்கிலம் மற்றும் பெரும்பாலான இந்திய மொழிகளில் வெளியிடுகிறோம்'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.