அண்ணா பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரியாக இயங்கி வரக்கூடிய 11 கல்லூரிகளில் மூன்று பாட பிரிவுகளுக்கான தமிழ் வழிக் கல்வி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


பாரம்பரியம் மிக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் ஆரணி, விழுப்புரம், திண்டிவனம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, புதுக்கோட்டை, திருக்குவளை, நாகர்கோவில்,  தூத்துக்குடி உள்ளிட்ட 14 இடங்களில் இயங்கி வருகின்றன.


இதில் தமிழ் வழியில் கல்வி பயிலும் விதமாக உறுப்புக் கல்லூரிகளில்  இயந்திரவியல், கட்டிடவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் பாடப் பிரிவுகள் இருந்ததை இந்த ஆண்டு முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


குறிப்பாக திண்டுக்கல், பண்ருட்டி, நாகர்கோயில் ஆகிய மூன்று உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழியில் நடத்தப்பட்டு வந்த கட்டிடவியல், இயந்திரவியல் ஆகிய இரு பாடப் பிரிவுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


அதேபோல அரியலூர், பட்டுக்கோட்டை உறுப்புக் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு வழிகளிலும் நடத்தப்பட்டு வந்த கட்டிடவியல், இயந்திரவியல் பாடப் பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருக்குவளை ஆகிய உறுப்புக் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருவழிகளிலும் நடத்தப்பட்டு வந்த இயந்திரவியல் பாடப்பிரிவும், தமிழில் நடத்தப்பட்டு வந்த கட்டிடவியல் பாடப் பிரிவும் மூடப்பட்டுள்ளன.


திருக்குவளை கல்லூரியில் ஆங்கில வழியில் நடத்தப்பட்டு வந்த மின்னியல் மற்றும் மின்னணுவியல் பாடப் பிரிவு மூடப்பட்டுள்ளது. ஆரணி, விழுப்புரம் ஆகிய உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழியில் நடத்தப்பட்டு வந்த இயந்திரவியல் பாடப்பிரிவும், திண்டிவனம் உறுப்புக் கல்லூரியில்  தமிழ் வழி கட்டிடவியல் பாடப்பிரிவும் மூடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 3 வகையான பாடப்பிரிவுகளில் 27 வகையான வகுப்புகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.


இதுதொடர்பான சுற்றறிக்கையை அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடப் பிரிவுகள் மையத்தின் இயக்குநர் ஹோசிமின் திலகர், அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை இயக்குநருக்கு அனுப்பி உள்ளார். 


இந்த நிலையில், தமிழ் வழிக் கல்வி பாடப் பிரிவுகளை மூடக்கூடாது என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகின்றன.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண