தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகேயுள்ள ரேகடஅள்ளி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட 7 ஆசிரியர்களும், 1 முதல் 8-ம் வகுப்பு வரை 135 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வியில் கவனம் செலுத்துவதோடு, பள்ளியை நல்ல முறையில் பராமரித்து வருகின்றனர்.
கல்வியில் பின் தங்கிய தருமபுரி மாவட்டத்தில் கிராம பகுதியிலிருந்து அரசு பள்ளிகளில் படித்து வரும் பள்ளி மாணவ மாணவிகளின் கல்வியில் அக்கறை கொண்டு, ஆசிரியர் என்றால் பாடம் நடத்துவது மாத சம்பளம் பெறுவது என்பது மட்டுமல்லாமல் தான் பணியாற்றும் பள்ளிக்கு தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு தன்னால் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் மதனகோபாலன், தனது சொந்த செல்வில் 420 புத்தகங்கள் கொண்ட ஒரு சிறு நூலகத்தை அமைத்துள்ளார். தொடர்ந்து மாணவர்களுக்கு உலக அறிவை புகட்ட வேண்டும் என் எண்ணியுள்ளார்.
இதற்கு தான் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, அதில் ரூ.3.60 இலட்சம் ரூபாயை ஒதுக்கு 11 கணினிகளை வாங்கி, நவீன வசதிகளுடன் கூடிய அறையை உருவாக்கி ஒரு கணினி ஆய்வகத்தை அமைத்துள்ளார். இந்த ஆய்வகத்தின் மூலம் மாணவ, மாணவிகள் கணினி இயக்குவதும், புத்தகத்தினை பார்த்து எழுத்துகளை தட்டச்சு செய்வது, ஓவியம் வரைவது உள்ளிட்ட பயிற்சிகளை பெறுகின்றனர். மேலும் புத்தகத்தில் உள்ள ஆங்கில வார்த்தைகளுக்கான பொருள் விளக்கத்தினை அரிய மாணவ, மாணவிகள் கணினியில் இணைய வழியில் கண்டுபிடிக்கவும், உலக அறிவுகளை தெரிந்து கொள்ளவும் இணைய வசதி இல்லாததால் அறிந்து கொள்ள முடியவில்லை. மேலும் பள்ளிக்கு தேவையான மின்சார வசதி இல்லாத இருந்த நிலையில் வகுப்பறைகளுக்கு புதிதாக மின்சார இணைப்புகளை ஏற்படுத்தி மின் இணைப்பு பெற்றும் கொடுத்துள்ளார்.
மேலும் சிறிய பிள்ளைகள் அரசு பள்ளியில் சேருகின்ற பொழுது, பள்ளிக்கு வருகின்ற எண்ணத்தை தூண்ட வேண்டும் என்பதற்காக, ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரைகளுக்கான கட்டிடங்களில் தரைதலத்தை பெயர்த்து எடுத்து விட்டு, முழுவதுமாக டைல்ஸ் ஒட்டி வகுப்பறைகள் முழுவதும் வண்ணம் தீட்டி, சிறு குழந்தைகளை கவருகின்ற வகையில் பல்வேறு வகையான வண்ண ஓவியங்களை வரைந்து உள்ளார். மேலும் வகுப்பறையில் உள்ள குழந்தை எந்த திசையில் திரும்பினாலும், அவர்களை ஈர்க்கின்ற வகையில் ஓவியங்களும், அதுவும் பாடம் படிப்பதற்கு பயனுள்ள வகையிலும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். பள்ளி சுற்றுச்சூழல் முழுவதும் ஆங்காங்கே ஓவியங்களும், தங்களது அறிவை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பொதுவான கருத்துக்களும் எழுதப்பட்டு இருக்கிறது. கழிவறை செல்கின்ற பிள்ளைகளுக்கு, அங்கும் அவர்களை கவருகின்ற வகையில் கார்ட்டூன் படங்கள் வரையப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர் சேர்க்கையும் அதிகரித்து, மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வமுடன் வருகின்றனர்.
மேலும் இந்த பள்ளியில் படித்து முடித்து சென்ற மாணவர்களை தொடர்ந்து படிப்பதற்கு வழிகாட்டி, பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு தனது சொந்த செலவில் கட்டணம் செலுத்தி படிக்க வைப்பது, ஏழை குழந்தைகளுக்கு படிப்பதற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். இவர் உதவியால் இந்த கிராமத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளில் முன்னாள் மாணவர்கள் வெற்றி பெற்று, நல்ல அரசு பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த கணித ஆசிரியரின் செயல்பாட்டால் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களும், படித்து முடித்த மாணவர்களும் நன்றாக படித்து, நல்ல நிலையை அடைந்து வருகின்றனர். இந்த ஆசிரியர் மற்றும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கிராமத்தில் உள்ள பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.
இந்த மாணவர்களின் அறிவை பெருக்கி கொள்ள கணினி ஆய்வகத்திற்கு இணையதள வசதி தேவைப்படுகிறது. இந்த இணையதள வசதியினை அரசாங்கமோ, தனியார் அல்லது தோண்டு நிறுவனங்கள் செய்து கொடுத்தால் மேலும் அறிவை பெருக்கி கொள்ள வசதியாக இருக்கும். மேலும் 2008 ஆம் ஆண்டில் இதே அரசு பள்ளியில் தனது பணியை தொடங்கிய மதனகோபாலன் ஆசிரியர், தற்பொழுது 16 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றி வருகிறார். மேலும் பள்ளிகளுக்கு வருகை புரிந்து பாடங்களை மட்டும் நடத்திவிட்டு செல்லக்கூடிய ஆசிரியர்கள் வாழக்கூடிய இந்த சமூக நிலையில், தன்னிடம் பயிலக் கூடிய மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க தன்னால் முடிந்த உதவியை செய்வேன். இது எனக்கு மிகுந்த மன நிறைவை தருவதாக கணித ஆசிரியர் மதனகோபால் தெரிவிக்கிறார். அரசு பள்ளியில் பணியாற்றிக் கொண்டு தனது சொந்த செலவில் மாணவர்களின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வரும் இந்த கணித ஆசிரியரின் செயல் பாராட்டுக்குரியது. இதுபோன்ற அரசு பள்ளியில் மாணவர்களின் வளர்ச்சிக்காக சேவை புரியம் ஆசிரியர்கள், ஆசிரியர் தினத்தில் போற்றப்படக்கூடியவர்கள். இது போன்ற ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான ராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்பது நிதர்சனம்.