பொதுத் தேர்வின்போது மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் செல்போன் மற்றும் இதர தொலைதொடர்பு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


2022-2023ஆம்‌ கல்வியாண்டிற்கான மார்ச்‌/ஏப்ரல்‌ 2023 மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகள்‌ 13.03.2023 அன்று தொடங்கி 03.04.2023 வரை‌ நடைபெற உள்ளன. 


இந்த நிலையில் தேர்வுப்‌ பணியில்‌ அனைத்து நிலைகளிலும்‌ தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன. மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மற்றும்‌ இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகளுக்கு 281 வினாத்தாள்‌ கட்டுக்காப்பு மையங்கள்‌ பாதுகாப்பான இடங்களில்‌ அமைக்கப்பட்டுள்ளன. அவ்விடங்களில்‌ 24 மணி நேர ஆயுதம்‌ தாங்கிய காவலர்‌ பாதுகாப்பு ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன. 


தேர்வுக்‌ கால கண்காணிப்பு ஏற்பாடுகள்‌


அனைத்து மாவட்டங்களிலும்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ தலைமையில்‌ மாவட்டத்‌ தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள்‌ கல்வித்‌ துறை அலுவலர்களுடன்‌ இணைந்து செயல்படுவர்‌. அக்குழுவில்‌ மாவட்டக்‌ காவல்‌ துறை கண்காணிப்பாளர்,மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌, சார்‌ ஆட்சியர், வருவாய்‌ கோட்டாட்சியர்‌ ஆகியோரும்‌ இடம்‌ பெற்றுள்ளனர்‌. அவரவர்களது மாவட்டங்களில்‌ அவரவர்‌ எல்லைக்குட்பட்ட தேர்வு மையங்களை திடீர்‌ பார்வையிட்டு முறைகேடுகள்‌, ஒழுங்கீனச்‌ செயல்கள்‌ எதுவும்‌ நடைபெறா வண்ணம்‌ தீவிரமாகக்‌ கண்காணித்திட ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன. 


பள்ளிக்‌ கல்வித்‌ துறையைச்‌ சார்ந்த உயர்‌ அதிகாரிகள்‌, இயக்குநர்கள்‌, இணை இயக்குநர்கள்‌ மற்றும்‌ துணை இயக்குநர்கள்‌ ஆகியோர்‌ அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று தேர்வு முன்பணிகளையும்‌, தோ்வுக்கால பணிகளையும்‌ மேற்பார்வையிட்டு கண்காணிப்புப்‌ பணியில்‌ ஈடுபட ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.


மேலும்‌ ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ உள்ள ஆய்வு அலுவலர்களான முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ மற்றும்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌, அம்மாவட்டத்திலுள்ள அனைத்துத்‌ தேர்வு மையங்களையும்‌ சரிசமமாகப்‌ பிரித்துக்‌ கொண்டு தோ்வு நாட்களின்போது தங்களுடன்‌ கண்காணிப்புக்‌ குழுவை அழைத்துக்‌ கொண்டு தேர்வு மையங்களைப்‌ பார்வையிட்டு முறைகேடுகள்‌ ஏதுவும்‌ நடைபெறாவண்ணம்‌ தீவிரமாகக்‌ கண்காணித்திட ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.


அலைபேசி தடை


தேர்வு மைய வளாகத்திற்குள்‌ அலைபேசியை எடுத்து வருதல்‌ முற்றிலும்‌ தடை செய்யப்பட்டுள்ளது.தேர்வர்கள்‌ தங்களுடன்‌ அலைபேசியை கண்டிப்பாக எடுத்து வருதல்‌ கூடாது. மேலும்‌ தேர்வர்களது அலைபேசிகள்‌ பராமரிப்பிற்கு தேர்வு மையங்கள்‌ பொறுப்பேற்காது. அத்துடன்‌ தேர்வு பணியில்‌ ஈடுபடும்‌ ஆசிரியர்கள்‌ தேர்வறையில்‌ தங்களுடன்‌ அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி/ இதர தகவல்‌ தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால்‌ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.


ஒழுங்கீனச்‌ செயல்பாடுகள்


தேர்வு நேரங்களில்‌ தேர்வர்கள்‌ துண்டுத்தாள்‌ வைத்திருத்தல்‌, துண்டுத்தாட்களை பார்த்து எழுத முயற்சித்தல்‌, பிற மாணவர்களை பார்த்து எழுதுதல்‌, தேர்வு அதிகாரியிடம்‌ முறைகேடாக நடந்துகொள்ளுதல்‌, விடைத்தாள்‌ பரிமாற்றம்‌ செய்தல்‌, விடைத்தாளில்‌ தாம்‌ எழுதிய அனைத்து விடைகளையோ / பகுதி விடைகளையோ தாமே கோடிட்டு அடித்தல்‌ மற்றும்‌ ஆள்மாறாட்டம்‌ செய்தல்‌ ஆகிய ஒழுங்கீனச்‌ செயல்களில்‌ ஈடுபட்டால்‌ கடும் குற்றமாக கருதப்படும்‌ என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.