PM SHRI Scheme: தமிழ்நாட்டில் PM SHRI கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள மொழி ஆசிரியர்களின் விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய - மாநில அரசுகள் மோதல்:
புதிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் PM SHRI திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், மும்மொழிக்கொள்கை மூலம் இந்தியை திணிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சிப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதனால், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய சுமார் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், தமிழ்நாடு அரசு மொத்தமாக 5 ஆயிரம் கோடி ரூபாயை இழக்க நேரிடும் எனவும், திமுக தலைமையிலான அரசு மாணவர்களின் கல்வியை வைத்து அரசியல் செய்வதாகவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், உலகின் மூத்த மொழியான தமிழை பிரதமர் மோடி போற்றுவதோடு, உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதாகவும் கூறி வருகிறார். ஆனால், இந்தியை திணித்து, தமிழை ஒழித்து, ஒரே நாடு ஒரே மொழி பாதையில் பயணிக்க பாஜக முற்படுவதாக தமிழக அரசியல் கட்சிகள் சாடி வருகின்றன.
வெளியான அதிர்ச்சி தகவல்:
இந்நிலையில் தான், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் இயங்கும் PM SHRI - கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள மொழி ஆசிரியர்களின் விவரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, அந்த திட்டத்தின் கீழ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் 34 பள்ளிகளில், ஒன்றில் கூட ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கி, தமிழக மாணவர்களை பயிற்றுவிக்கும் பள்ளிகளில், தாய்மொழி தமிழை கற்றுக்கொடுக்க ஒரு ஆசியர் கூட அந்த பள்ளிகளில் இல்லாதது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமஸ்கிருதத்திற்கு ஆசிரியர்கள்:
சமஸ்கிருதம் மொழியை நாட்டின் மொத்த மக்கள் தொகையில், மிகவும் சொற்பமான நபர்கள் மட்டுமே பேசுவதாக சில ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. அப்படி இருக்கும் மொழியை பயிற்றுவிக்க, கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் 15 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தி மொழியை பயிற்றுவிக்க அந்த 34 பள்ளிகளில், 52 ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், உலகின் மிகவும் பழமையான மொழி, செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழி, தமிழ்நாட்டின் ஆதி மொழி, தமிழர்களின் தாய்மொழி என போற்றப்படும், தமிழ் மொழியை பயிற்றுவிக்க தமிழ்நாட்டில் இயங்கும் பள்ளிகளில் ஒரு ஆசியர் கூட இல்லை.
கேந்திரியா வித்யாலயா பள்ளி மொழிகள்:
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், பின்வரும் மொழிகள் கட்டாயமாகக் கற்பிக்கப்படுகின்றன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் மொழிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. 9 மற்றும் 10ம் வகுப்பு முதல் ஆங்கிலத்துடன் சேர்ந்து இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் இருந்து ஏதேனும் ஒரு மொழியை தேர்வுசெய்து பயிலலாம்.
தமிழ் மொழியை காப்பாற்றுகிறதா பாஜக?
முந்தைய காங்கிரஸ் ஆட்சியை காட்டிலும் பாஜக ஆட்சியில் தமிழ் மொழிக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளிப்பதாகவும் பாஜகவினர் மார்தட்டி வருகின்றனர். ஆனால், சில ஆயிரம் பேர் பேசும் சமஸ்கிருதம் மொழிக்கு ஒதுக்கும் நிதியை காட்டிலும், பல கோடி பேர் பேசும் தமிழ் மொழிக்கு ஒதுக்கும் நிதி மிகவும் குறைவாகவே உள்ளதை தரவுகள் காட்டுகின்றன. தேசிய பாஜகவின் விளம்பரங்கள், தமிழ்நாட்டில் வெளியாகும்போது கூட அவற்றின் இந்தி பெயர்கள் அப்படியே தமிழில் தான் எழுதப்பட்டு இருக்கும் என திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இவர்கள் தான் தமிழை போற்றுகின்றனரா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்
இந்த சூழலில் தான் தாய் மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்கவே, புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், ஒரு தமிழ் ஆசிரியரை கூட நியமிக்காமல், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எப்படி தாய்மொழி தமிழ் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது? என நெட்டிசன்களும் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்