நுழைவுத் தேர்வு எதுவும் இல்லாமல், டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 29 சான்றிதழ் படிப்புகளைப் படிக்கலாம் என்று பல்கலைக்கழகத்தின் திறந்தநிலை கற்றல் வளாகம் (COL) சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தொழில்கள் மற்றும் துறை சார்ந்து அறிவையும் தனித்திறன்களையும் வளர்க்கும் வகையில் இந்த சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் col.du.ac.in என்ற முகவரியை க்ளிக் செய்து, பதிவு செய்துகொள்ளலாம். 3 மாதங்கள் முதல் 10 மாதங்கள் வரை சான்றிதழ் படிப்புகள் கற்பிக்கப்பட உள்ளன.
என்ன தகுதி?
விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும். தகுதித் தேர்வை முடித்துவிட்டு, முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவர்களும் இதற்குத் தகுதியானவர்கள் ஆவர்.
அதேபோல மாணவர் சேர்க்கைக்கு அடிப்படைத் தகுதி போதுமானது. போட்டித் தேர்வு எதுவுமில்லை. டெல்லி பல்கலைக்கழகம் அல்லது பிற கல்வி நிறுவனங்களில் படித்துக் கொண்டிருப்பவர்களும் இந்தப் படிப்பில் சேரத் தகுதியானவர்கள்.
திறந்தநிலை கற்றல் பள்ளி- School of Open Learning (SOL), கல்லூரி அல்லாத மகளிர் கல்வி வாரியம் - Non-Collegiate Women's Education Board (NCWEB), பிற கல்லூரிகள், டெல்லி பல்கலை. பிற துறை மாணவர்களும் சான்றிதழ் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
கற்பித்தல் எப்படி?
சில படிப்புகள் ஆன்லைன் மூலமாகவும் சில நேரடி முறையிலும் கற்பிக்கப்படும். சில படிப்புகள் இரண்டு முறையிலும் கற்பிக்கப்படும் என்று டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
என்னென்ன படிப்புகள்?
* மருத்துவ டிரான்ஸ்கிரிப்ஷன்
* விமானக் கட்டணம் சார் படிப்பு
* விமான நிலைய மேலாண்மை
* சுற்றுலா சார் படிப்பு
* கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு அமைப்பு (CRS)
* நிதிச் சந்தைகளில் திறன் திட்டம்
* அலுவலக ஆட்டோமேஷன் மற்றும் மின் கணக்கியல்
* மென் திறன்கள் மற்றும் ஆளுமை வளர்ச்சி
* ஸ்டெனோகிராபி, செயலகப் பயிற்சிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறன்கள்
* பைத்தானைப் பயன்படுத்தி தரவு அறிவியல் மற்றும் இயந்திர கற்றல்
* எத்திக்கல் ஹேக்கிங் மற்றும் சைபர் பாதுகாப்பு
* ஃபேஷன் வடிவமைப்பு, வணிகம் மற்றும் தொழில்முனைவு
* ஃபேஷன் மற்றும் மின்வணிகத்திற்கான புகைப்படம்
* ஃபேஷன் மாடலிங் மற்றும் அழகு போட்டி சீர்ப்படுத்தல்
* பேஷன் டிசைன் மற்றும் CAD
* நிகழ்வு மேலாண்மை, சந்தைப்படுத்தல் மற்றும் மக்கள் தொடர்பு
* உள்துறை வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலை திட்டமிடல்
* படத்தொகுப்பு, இயக்கம் மற்றும் திரைக்கதை
* மக்கள் தொடர்பு மற்றும் டிஜிட்டல் மீடியா தயாரிப்புகள்
* நுண்கலைகள் மற்றும் டிஜிட்டல் கலைகள்
* புகைப்படம் எடுத்தல் (ஸ்டில் மற்றும் வீடியோ)
* திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் திரையரங்கில் நடிப்பு
* ரேடியோ ஜாக்கி, ஆங்கரிங், டிவி ஜர்னலிசம்
* அனிமேஷன், மோஷன் கிராபிக்ஸ் மற்றும் வீடியோ எடிட்டிங்
* டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் சமூக ஊடக விளம்பரம்
* 3D அனிமேஷன் மற்றும் வீடியோ எடிட்டிங்
* கிராஃபிக் டிசைனிங், டிடிபி மற்றும் வீடியோ எடிட்டிங்
* உள்துறை வடிவமைப்பு மற்றும் CAD
* நுண்கலை மற்றும் விளக்கப்படம் ஆகிய சான்றிதழ் படிப்புகள் கற்பிக்கப்பட உள்ளன.