அடுத்த கல்வி ஆண்டு முதல் தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க டெல்லி முழுவதும் 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு 6+ வயது கட்டாயம் என்பன உள்ளிட்ட புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
டெல்லி அரசு, தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-க்கு இணங்க, 2026-27 கல்வியாண்டு முதல், டெல்லி கல்வி இயக்குநரகத்தின் (DoE) கீழ் இயங்கும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ஒரே மாதிரியான 6+ வயது வரம்பை அமல்படுத்த உள்ளது. மேலும், அடுத்த ஆண்டு முதல், ஆரம்ப நிலைகளுக்கான வயது வரம்பை படிப்படியாக திருத்தி அமைக்கவுள்ளது.
டெல்லி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, தற்போது ஆரம்ப நிலையில் நர்சரி மற்றும் மழலையர் வகுப்புகள் உள்ளன, அதைத் தொடர்ந்து 1ஆம் வகுப்பு வருகிறது. இவற்றில் சேர்வதற்கான குறைந்தபட்ச வயது முறையே 3+, 4+ மற்றும் 5+ ஆண்டுகளாகும்.
திருத்தப்பட்ட அமைப்பில், நர்சரி (பால்வாடிகா 1/ முன்-பள்ளி 1) வகுப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது (மார்ச் 31 நிலவரப்படி) 3 மற்றும் 4 ஆண்டுகள்; எல்.கே.ஜி (பால்வாடிகா 2/முன்- பள்ளி 2) 4 மற்றும் 5 ஆண்டுகள்; யூ.கே.ஜி (பால்வாடிகா 3/ முன்-பள்ளி 3) 5 மற்றும் 6 ஆண்டுகள்; மற்றும் 1ஆம் வகுப்பு - 6 மற்றும் 7 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தளர்வு உண்டா?
இருப்பினும், நர்சரி முதல் 1-ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கைகளுக்கு, குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்புகளில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒரு மாதம் வரை தளர்வு அளிக்கலாம்.
புதிய வயது வரம்புகள் 2025-26 கல்வியாண்டின் மாணவர்களுக்குப் பொருந்தாது என்றும் இந்த முறை 2026- 27 கல்வியாண்டு முதல் மட்டுமே நடைமுறைக்கு வரும்.
அதாவது 2025- 26ஆம் கல்வியாண்டின் நர்சரி, கே.ஜி. மற்றும் 1ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போதைய அமைப்புப்படி 2026-27 இல் அடுத்த உயர் வகுப்புக்கு உயர்த்தப்படுவார்கள். 2026- 27ஆம் கல்வியாண்டில் புதிய கே.ஜி சேர்க்கைகள் 4+ வயதுடைய குழந்தைகளுக்கு (மார்ச் 31, 2026 நிலவரப்படி) மட்டுமே பெற முடியும்.
அளவுகோலில் இருந்து விலக்கு
மேலும், அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் இருந்து முந்தைய வகுப்பில் தேர்ச்சி பெற்று, செல்லுபடியாகும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் (SLC) மற்றும் மதிப்பெண் பட்டியல் வைத்திருக்கும் மாணவர்கள், அடுத்த உயர் வகுப்பில் சேரும்போது வயதுக்கு ஏற்ற அளவுகோலில் இருந்து விலக்கு பெறுவார்கள்.
இந்த மாற்றங்கள் குறித்து பெற்றோர்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்குமாறும், மாணவர் சேர்க்கை மற்றும் முன்னேற்றத்திற்கான திருத்தப்பட்ட வயது வரம்புகளை கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.