நாகையில் முறைகேடு செய்து, தாய்க்கு பதிலாக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மகளை, தேர்வுத் துறை அதிகாரிகள் பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்துக்கான 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 28ஆம் தேதி தமிழ்ப் பாடத்துடன் இந்தத் தேர்வு தொடங்கியது. இந்த நிலையில், ஏப்ரல் 2ஆம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது. தனித்தேர்வர்களுக்கும் இந்தத் தேர்வு தொடங்கி நடந்தது.

நடராஜன் தமயந்தி பள்ளியில் சம்பவம்

இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெளிப்பாளையம், நடராஜன் தமயந்தி பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலப்  பாடத்துக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்றது. தேர்வு நடந்து கொண்டிருக்கும்போது முகக் கவசம் அணிந்தபடி மாணவி ஒருவர் தேர்வை எழுதிக் கொண்டிருந்தார்.

அவரின் வருகைப் பதிவேட்டில் இருந்த முகத்துக்கும் தேர்வருக்கான அனுமதிச் சீட்டில் இருந்த முகத்துக்கும் வித்தியாசம் இருந்தது. இதைத் தொடர்ந்து தேர்வுத் துறை கண்காணிப்பு அதிகாரிகள் விசாரித்ததில், தன் தாய்க்காக, மகள் தேர்வு மையத்துக்கு வந்து ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வை எழுதியது தெரிய வந்தது.

தாய்க்காக மகள் ஆள்மாறாட்ட மோசடி

தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள், மகளைக் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். தாய்க்காக மகள், ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டது வெளிப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (ஏப். 4) விருப்பப் பாடத்துக்கான பொதுத் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.