க்யூட் இளங்கலைத் தேர்வு முடிவுகள் இன்று இரவு சுமார் 10 மணிக்கு வெளியாகும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. ஜூலை மாதத்தில் தொடங்கிய தேர்வு, ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது.
இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்தியது.
எனினும் தேர்வு தாமதமாகத் தொடங்கியது, தேர்வு மையங்களில் குழப்பம் உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்தன. நாடு முழுவதும் முதல்முறை நடத்தப்படும் நுழைவுத் தேர்வு என்பதால், சில பிரச்சினைகள் எழுந்ததாகவும் அவை விரைவில் சரிசெய்யப்படும் எனவும் யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் விளக்கம் அளித்தார்.
14.9 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினர். முதல்கட்டத் தேர்வை 2.49 லட்சம் தேர்வர்கள் எழுதினர். 2ஆவது கட்டத் தேர்வை 1.91 லட்சம் தேர்வர்களும் 3ஆவது கட்டத் தேர்வை 1.91 லட்சம் தேர்வர்களும் எழுதினர்.
அதேபோல 4ஆவது கட்டத் தேர்வை 3.72 லட்சம் தேர்வர்களும் 5ஆவது கட்டத் தேர்வை 2.01 லட்சம் தேர்வர்களும் 6ஆவது கட்டத் தேர்வை 2.86 லட்சம் தேர்வர்களும் எழுதினர். நாடு முழுவதும் 259 நகரங்களில், 489 தேர்வு மையங்களிலும் வெளிநாடுகளில் 10 நகரங்களிலும் தேர்வு நடைபெற்றது.
க்யூட் தேர்வு முடிவுகள்
க்யூட் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து 90 பல்கலைக்கழகங்கள், 44 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 12 மாநிலப் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளன.
இந்நிலையில் சியுஎட் (CUET) நுழைவுத் தேர்வு இறுதி விடைக்குறிப்பு அன்மையில் வெளியான நிலையில் தேர்வு முடிவுகள் இன்று (செப்டம்பர் 15ஆம் தேதி) வெளியாக உள்ளன.
இதுகுறித்து யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’’மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நுழைவுத் தேர்வு முடிவுகளை இன்று இரவு 10 மணி அளவில் தேசியத் தேர்வுகள் முகமை வெளியிடும்’’ என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: nta.ac.in,