சியுஇடி எனப்படும் க்யூட் இளநிலைத் தேர்வு இன்று நடைபெற்ற நிலையில், சில மையங்களில் எதிர்பாராத தாமதம் ஏற்பட்டதால், தேர்வை நடத்திய என்டிஏ 2ஆம் ஷிப்ட் நேரத்தை மாற்றி அமைத்துள்ளது. 

Continues below advertisement

நாடு முழுவதும் உள்ள முன்னணி மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வினை (CUET) தேசியத் தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்று வருகின்றனர். முன்னதாக மே 11 முதல் 31ஆம் தேதி வரை க்யூட் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தன. இந்த நிலையில், பக்ரீத் பண்டிகை காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு, ஜூன் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 

இந்த நிலையில் இன்று (மே 30) தேர்வுகள் தொடங்கி நடைபெற்றன. சில குறிப்பிட்ட மையங்களில் ஏற்பட்ட நிர்வாக மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தேர்வு தொடங்குவதில் எதிர்பாராத வகையில், மிகப்பெரிய தாமதம் ஏற்பட்டது. இதன் விளைவாக, இன்று நடைபெறவிருந்த இரண்டாம் ஷிப்ட் தேர்வு நேரத்தை என்.டி.ஏ அதிகாரப்பூர்வமாக மாற்றி அமைத்தது.

Continues below advertisement

இன்று காலை திட்டமிட்டபடி முதல் ஷிப்ட் தேர்வு தொடங்க இருந்த நிலையில், ஒரு சில தேர்வு மையங்களில் வினாத்தாள் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகள், மாணவர்களின் வருகைப்பதிவு சரிபார்ப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் சர்வர் முடக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். 

கடும் வெயிலில் காத்திருந்த மாணவர்கள்

குறிப்பாக சில மையங்களில் தவறான வினாத்தாள்கள் வழங்கப்பட்டுவிட்டதால், அதை உடனடியாக சரிசெய்து மீண்டும் சரியான புதிய வினாத்தாள் வழங்க கூடுதல் நேரம் தேவைப்பட்டது. இதனால் தேர்வு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகவே தொடங்கியது. தேர்வு மையங்களுக்கு வெளியே வெயிலில் காத்திருந்த மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் இந்த தாமதத்தால் கடும் அதிருப்தியும் மன உளைச்சலும் அடைந்தனர்.

இந்த குழப்பங்களைத் தொடர்ந்து, உடனடியாக தலையிட்ட தேசிய தேர்வு முகமை, நிலைமையை சீர்செய்யும் பணிகளில் இறங்கியது. முதல் ஷிப்ட் தேர்வு தாமதமாக முடிவடைந்த காரணத்தால், மதியம் நடைபெற இருந்த இரண்டாம் ஷிப்ட் தேர்வு நேரமும் கட்டாயமாக மாற்றியமைக்கப்பட்டது. 

என்டிஏ விளக்கம்

இதுகுறித்து விளக்கமளித்துள்ள என்டிஏ மூத்த அதிகாரிகள், "எந்தவொரு மாணவரும் சிறு அளவிலும் பாதிக்கப்படாத வகையில் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு தாமதமாக தொடங்கப்பட்ட மையங்களில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், தேர்வினை முழுமையாக எழுதி முடிக்க அவர்களுக்கு உரிய முழு நேரமும் கட்டாயம் வழங்கப்படும். இதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்பட மாட்டாது" என உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாற்றியமைக்கப்பட்ட புதிய தேர்வு நேரம் குறித்த முழுமையான விவரங்கள் சியுஇடி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் எவ்வித பதற்றமும் அடைய வேண்டாம் எனவும், தேர்வு மையங்களில் உள்ள கண்காணிப்பாளர்களின் அறிவுறுத்தல்களைத் தவறாமல் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

எதிர்காலத்தில் இதுபோன்ற நிர்வாக ரீதியான குளறுபடிகள் மீண்டும் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் நீட் தேர்வு போலவே தற்போது க்யூட் தேர்விலும் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.