இந்தியாவில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட மாநில, நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் 2026- 27ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை (Undergraduate) படிப்புகளில் சேருவதற்கான 'பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு' (CUET UG - 2026) குறித்த அறிவிப்பை தேசியத் தேர்வுகள் முகமை (NTA) வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

முக்கியத் தேதிகள்

இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜனவரி 30, 2026 (இரவு 11:50 மணி வரை) கடைசி நாளாகும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த ஜனவரி 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 4 வரை மேற்கொள்ளலாம்.

தேர்வு எப்போது?

2026ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை (உத்தேசமாக) தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் கணினி வழித் தேர்வு (Computer Based Test - CBT) முறையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள முக்கிய மையங்களில் நடைபெறும். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட மொத்தம் 13 மொழிகளில் க்யூட் தேர்வு நடத்தப்படும்.

Continues below advertisement

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள மாணவர்கள் https://cuet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு விண்ணப்பம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மாணவர்கள் தங்களின் சொந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்துவது அவசியமாகும், ஏனெனில் அனைத்துத் தகவல்களும் அதன் மூலமே பகிரப்படும்.

தேர்வு நடைபெறும் நகரம் மற்றும் அனுமதி அட்டை (Admit Card) பதிவிறக்கம் செய்வது குறித்த விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

உதவி மையம்

விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால், மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசுகளின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கும் சில் தனியார், நிகர்நிலை கல்லூரி மாணவர்களுக்கும் இந்த நுழைவுத் தேர்வு ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு மாணவர்கள் அவ்வப்போது https://cuet.nta.nic.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.