க்யூட் எனப்படும் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 22 கடைசித் தேதி ஆகும். தேர்வர்கள் மார்ச் 23ஆம் தேதி இரவு வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

க்யூட் நுழைவுத் தேர்வு எதற்கு?

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், க்யூட் தேர்வை அனுமதித்த மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை கலை, அறிவியல் படிப்புகளில் சேர க்யூட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமையால் நடத்தப்படும் இந்தத் தேர்வு, 13 இந்திய மொழிகளில் நடக்கிறது. குறிப்பாக, தமிழ், ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது.

முக்கியத் தேதிகள்

இந்தத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், அதற்கு மார்ச் 22 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கிரெடிட்/டெபிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது UPI மூலம் மார்ச் 23ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். மார்ச் 24 முதல் 26ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய முடியும்.

2025ஆம் ஆண்டுக்கான தேர்வு மே 8 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு மையம் மற்று ஹால் டிக்கெட் விவரங்கள் பின்னர் வெளியிடப்பட உள்ளன.  

தேர்வு முறையில் முக்கிய மாற்றங்கள் 

2025ஆம் ஆண்டுக்கான க்யூட் இளநிலைத் தேர்வில் (CUET UG 2025) முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, கலப்பு முறையாக இருந்த தேர்வு முறை, இனி கணினி மூலம் (Computer-Based Test (CBT) Format)மட்டுமே நடைபெற உள்ளது.

பாடத் தேர்வில் நெகிழ்வுத் தன்மை

அதேபோல 12ஆம் வகுப்பில் என்ன படித்திருந்தாலும், தேர்வு எழுதுவதற்கான பாடங்களை நெகிழ்வுத் தன்மையுடன் தேர்வு செய்யலாம்.

பாட எண்ணிக்கை குறைவு

அதேபோல தேர்வுக்கான மொத்த பாடங்களின் எண்ணிகை 63-ல் இருந்து 37 ஆகக் குறைக்கப்படுள்ளது.

மேலும் மொத்த தேர்வு நேரம் ஒரே சீராக 60 நிமிடமாக மாற்றப்பட்டுள்ளது. ஆப்ஷனல் கேள்வி முறை ரத்து செய்யப்பட்டு, அனைத்து கேள்விகளும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன.