கடலூர் : கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் 'நடுவுல கொஞ்சம் கற்றலைத்தேடி' மற்றும் 'தடைகளைத்தாண்டி தேர்ச்சி' ஆகிய சிறப்புத் திட்டங்கள் மூலம் 13,502 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

Continues below advertisement

நடுவுல கொஞ்சம் கற்றலைத்தேடி

நடுவுல கொஞ்சம் கற்றலைத்தேடி மற்றும் தடைகளைத்தாண்டி தேர்ச்சி திட்டங்களின் மூலம் நடைபெறும் சிறப்பு வகுப்புகளால், மாவட்டத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் தேவைக்கேற்ப பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்துதல்

அரசுப்பள்ளிகளில் 6,7,8 ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில், 'நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி' திட்டத்தில் பல்வேறு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. சில மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு தேவையான அடிப்படை பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

Continues below advertisement

பள்ளிகளில் கூடுதல் கவனம் தேவை என கண்டறியப்பட்ட மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு, பொறுப்பாசிரியர்களை கொண்டு, தனி வகுப்பறையில் சிறப்பு வகுப்புகள் பாடவாரியாக நடத்தப்பட்டு வருகிறது. கடலுார் கல்வி கோட்டத்தில் 257 பள்ளிகளிலும், விருத்தாசலம் கல்வி கோட்டத்தில் 264 பள்ளிகளிலும் என மொத்தம் கடலுார் மாவட்டத்தில் 521 பள்ளிகளில் பயிலும் 13,502 மாணவர்களுக்கு இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தடைகளை தாண்டி தேர்ச்சி

நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வில், 100 சதவீதம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றிடவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம், 'தடைகளை தாண்டி தேர்ச்சி' திட்டத்தின் மூலம் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பில் 1,671 மாணவர்கள் இடைநிற்றல் கண்டறியப்பட்டு, 'தடைகளை தாண்டி தேர்ச்சி' என்ற திட்டத்தின் முயற்சியால் அந்த மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்க வழிவகை செய்யப் பட்டுள்ளது. அண்மையில் மாவட்டத்தில் 'நடுவில் கொஞ்சம் கற்றலைத்தேடி' திட்டத்தில் மாணவர்கள் கல்வி கற்கும் விதத்தை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

அப்போது, மீண்டும் பள்ளிக்கு பயில வருகைபுரிந்த மாணவர்களின் வருகை பதிவை ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் இடைநிற்றல் இன்றி பள்ளிக்கு வருவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், கல்வி மட்டுமே நமது எதிர்காலத்தை சிறப்பாக மாற்ற முடியும். எனவே வருகின்ற பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற மாணவர்கள் முழுமுயற்சியுடன் படித்து வாழ்வில் மேன்மையடைய வேண்டும் என மாணவர்களிடம், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.