2025ஆம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) டிசம்பர் மாத அமர்வுக்கான அறிவிக்கை தாமதமாகி வருகிது. இது ஆர்வமுள்ள ஆசிரியர்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு புதிய அட்டவணை குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டுகளைப் போலல்லாமல், தேர்வுக்கான அறிவிப்பு மற்றும் முன்பதிவு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. முன்னதாக, CTET டிசம்பர் தேர்வுகள் ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையைப் பின்பற்றின. உதாரணமாக, டிசம்பர் 2024-ல், அறிவிப்பு செப்டம்பர் 13 அன்று வெளியிடப்பட்டது, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
ஜனவரி 2024-ல், அறிவிப்பு நவம்பர் 3 முதல் கிடைத்தது, மேலும் படிவங்கள் நவம்பர் 27 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த காலகட்டங்களில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டன, ஆனால் டிசம்பர் 2025 அமர்வு அறிவிக்கை இன்னும் வெளியாகவில்லை.
தேர்வு அட்டவணை தாமதம்
சிடெட் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ, டிசம்பர் 2025 தேர்வுக்கான விண்ணப்ப தொடக்கத் தேதியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரி 8, 2026 அன்று தேர்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தாலும், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் பதிவுக்காக இன்னும் காத்திருக்க வேண்டி உள்ளது.
பிப்ரவரி 8ஆம் தேதி தேர்வு
இதுகுறித்து சிடெட் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ கூறும்போது, ’’மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) பிப்ரவரி 8, 2026 (ஞாயிற்றுக் கிழமை) அன்று (தாள்- I மற்றும் தாள்- II) ஆகிய இரண்டுக்கும் நடைபெறும். இந்தத் தேர்வு நாடு முழுவதும் 132 நகரங்களில் இருபது மொழிகளில் நடத்தப்பட உள்ளது
தேர்வு, பாடத்திட்டம், மொழிகள், தகுதி அளவுகோல்கள், தேர்வு கட்டணம், தேர்வு நகரங்கள் மற்றும் முக்கிய தேதிகள் பற்றிய விரிவான தகவல் அறிக்கை விரைவில் CTET இன் அதிகாரப்பூர்வ வலை தளமான https://ctet.nic.in இல் வெளியிடப்படும்.
ஆன்லைனில் மூலம் மட்டுமே
விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட இணையதளத்தில் இருந்து தகவல் அறிக்கையை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கும் முன் கவனமாகப் படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் CTET இணையதளமான https://ctet.nic.in மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்’’ என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.