தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன. இதைப் பெறுவது எப்படி என்று காணலாம். 


மத்திய அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராக அரசுப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.


தேர்வு ஏன், எதற்கு?


அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராக 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராக 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலும் பணிபுரியலாம். மாநில அளவில் தனியாகவும் மத்திய அளவில் தனியாகவும் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.


சிடெட் எனப்படும் மத்திய அரசின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோர், மத்திய அரசின்கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதய வித்யாலயா பள்ளிகள், மத்திய திபெத்தியன் பள்ளிகளில் சேர்ந்து பணிபுரியலாம். 


27 லட்சம் பேர் விண்ணப்பம்


2024ஆம் ஆண்டுக்கான தகுதித் தேர்வு நாடு முழுவதும் ஜனவரி 21ஆம் தேதி நடைபெற்றது. 135 நகரங்களில் மொத்தம் 3,418 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இரண்டு தாள்களுக்கும் சேர்த்து, 26,93,526 தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். 


குறிப்பாக மொத்த தேர்வர்களில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான இடைநிலை ஆசிரியர் பணிக்கு, 9,58,193 பேர் தேர்வை எழுத விண்ணப்பித்தனர். 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பட்டதாரி ஆசிரியர் பணிக்கான இரண்டாம் தாளுக்கு 17,35,333 விண்ணப்பித்து இருந்தனர். இதில் 84 சதவீதம் பேர் தேர்வை எழுதினர். இந்த நிலையில் இவர்களுக்கான தற்காலிக விடைக் குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன.


இதில் ஆட்சேபனைக்குரிய விடைகளைத் தேர்வர்கள் ஆட்சேபிக்கலாம். ஆனால், ஒவ்வொரு கேள்விக்கும் ரூ.1000 தொகையைச் செலுத்த வேண்டும். இந்தப் பணம் திருப்பித் தர மாட்டப்படாது.


2 முதல் 3 நாட்களுக்கு தற்காலிக விடைக் குறிப்புகள் காண்பிக்கப்படும். அதற்குள் ஆட்சேபிக்க வேண்டும். இதற்கு நாளை மறுநாள் (பிப். 10ஆம் தேதி) இரவு 11.59 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் ஆட்சேபணைகளைப் பரிசீலித்து, இறுதி விடைக் குறிப்பு வெளியிடப்படும்.


உரிய காரணங்கள், விளக்கங்கள், ஆதாரங்கள் இல்லாமல் அளிக்கப்படும் ஆட்சேபணைகள் கருத்தில் கொள்ளப்படாது. பாட வல்லுநர்கள், தேர்வர்களின் ஆட்சேபணைகளைத் தீர ஆலோசித்து, இறுதி பாடக் குறிப்பை வெளியிடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துக் காண: https://cdnbbsr.s3waas.gov.in/s3443dec3062d0286986e21dc0631734c9/uploads/2024/02/2024020762.pdf


ஆட்சேபிப்பது எப்படி?


* தேர்வர்கள் https://cbseit.in/cbse/2024/ctetkey/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


* பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவு செய்து உள்ளே செல்லவும். 


* ஆட்சேபனைக்குரிய விடை குறித்து குறிப்பிட்டு, உரிய பணத்தைச் செலுத்தவும். 


கூடுதல் விவரங்களுக்கு https://ctet.nic.in