IPS Exam: பெற்றோர் இல்லாத நிலையில் பாட்டியின் வளர்ப்பில் தனது இலக்கை எட்டிய உதய கிருஷ்ணா ரெட்டியை ஆந்திர முதலமைச்சர் பாராட்டியுள்ளார்.
கான்ஸ்டபள் டூ ஐபிஎஸ் அதிகாரி:
எதிர்கால தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் மேலும் ஒரு உதாரணமாக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உதயகிருஷ்ணா உருவெடுத்துள்ளார். பிரகாஷம் மாவட்டம் உல்லபாலெம் கிராமத்தைச் சேர்ந்த இவர், சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் 350வது இடத்தை பிடித்து ஐபிஎஸ் அதிகாரியாக உருவெடுத்துள்ளார். சிறிய கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் பயின்று, மதிப்புமிக்க ஐபிஎஸ் அதிகாரியாக உயர்ந்துள்ள உதயகிருஷ்ணா ஆர்வமும், முயற்சியும் இருந்தால் கனவுகளுக்கு எல்லை என்பதற்கு அடையாளமாக உருவெடுத்துள்ளார்.
ராஜினாமா செய்த காவலர்:
ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த உதயகிருஷ்ணா, காய்கறி விற்று வரும் தனது பாட்டி ரமணம்மா அரவணைப்பில் வளர்ந்துள்ளார். தனது மாமா கோட்டி ரெட்டி என்பவரின் வழிகாட்டுதலால், தெலுங்கு மொழி கல்வியை முடித்து கடந்த 2013ம் ஆண்டில் காவல்துறையில் இணைந்தார். குட்லூரு மற்றும் ராமயாபட்ணம் பகுதி காவல்நிலையங்களில் பணியாற்றி வந்தார். 2018ம் ஆண்டு பொதுவெளியில் ஒருமுறை சக காவலர்கள் 60 பேரின் முன்னிலையில், காவல் ஆய்வாளரால் உதயகிருஷ்ணா அசிங்கப்படுத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாக தனது பணியை ராஜினாமா செய்து, சிவில் சர்வீஸ் தேர்வுக்காக முழு முயற்சியில் தயாராக தொடங்கியுள்ளார்.
நான்காவது முயற்சியில் வெற்றி..!
முதல் மூன்று முயற்சிகளில் அவர் தோல்வியுற்றாலும், தொடர் முயற்சிகளால் நான்காவது முயறிசியில் தேசிய அளவில் 780வது இடத்தை பிடித்தார். அதன் மூலம் இந்தியன் ரயில்வே மேனேஜ்மெண்ட் சர்வீஸில் பணி கிடைத்தாது. ஆனாலும் தனது இலக்கு ஐபிஎஸ் அதிகாரி என்பதில் உறுதியாக இருந்த உதய கிருஷ்ணா, பணியின் பயிற்சிக் காலத்திலேயே மீண்டும் தேர்வுக்கு தயாராகி வந்தார். அதன்படி, மீண்டும் எழுதிய தேர்வில் தற்போது தேசிய அளவில் 350வது இடத்தை ஐபிஎஸ் அதிகாரி எனும் தனது கனவை எட்டிப் பிடித்துள்ளார்.
”ஆங்கில மொழி சிக்கல்”
தெலுங்கு மொழியில் படித்ததால் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவது உதயகிருஷ்ணாவிற்கு மற்றொரு சவாலாக இருந்தது. இதற்காக முதலில் 1-10ம் வகுப்புகளின் ஆங்கில பாடப்புத்தகங்களை படித்து தனது ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொண்டார். பின்னர் NCERT ஆங்கிலம் மற்றும் சில அத்தியாவசிய ஆங்கில இலக்கணத்தை பயின்று தன்னை மேம்படுத்தினார். தினமும் ஆங்கில செய்தித்தாள்களைப் படிப்பதும், சேதன் பகத்தின் நாவல்களைப் படிப்பதும் தனது ஆங்கில மொழித் திறன் மேம்பாட்டிற்கு உதவியதாக தெரிவித்துள்ளார். அதோடு, பல மூத்த அதிகாரிகள் தன்னை ஊக்கப்படுத்தியதாவும், மகேஷ் பகவத் (கூடுதல் டிஜி) ஒரு தந்தையைப் போல தன்னை ஆதரித்ததகாவும் உதய கிருஷ்ணா நன்றி தெரிவித்துள்ளார்.
”ஒழுக்கம் முக்கியம்”
வெற்றி தொடர்பாக பேசிய உதய கிருஷ்ணா, “உங்கள் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் யாரும் இழிவுபடுத்த அனுமதிக்காதீர்கள். முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்குவதில் கவனம் செலுத்தி, தினமும் குறைந்தது 12 மணிநேரம் படிப்பிற்காக அர்ப்பணிக்க வேண்டும். பின்னர், தனிப்பட்ட திறனைப் பொறுத்து 8-10 மணிநேரம் போதுமானது. சிலருக்கு 6-8 மணிநேரம் போதுமானதாக இருக்கலாம். மிக முக்கியமானது தினசரி இலக்குகளை தொடர்ந்து தவறாமல் முடியுங்கள். ஒருவரின் அறிவுசார் திறனைப் பொறுத்து, பாடத்திட்டத்தை முடிக்க பொதுவாக 1.5 முதல் 2 ஆண்டுகள் ஆகலாம். 8 மணிநேர தூக்கம், சத்தான உணவு மற்றும் ஆன்மீகம், யோகா மற்றும் தியானம் மூலம் மன அழுத்தத்தை நிர்வகித்தேன்”என்றார். மேலும், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கான ஆலோசனையாக, "பயிற்சி வெற்றிக்கு 10% மட்டுமே பங்களிக்கிறது, 90% தனிப்பட்ட கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்தைப் பொறுத்தது” என வலியுறுத்தியுள்ளார்.