கலைத் திருவிழா நடத்துவதா? காலாண்டுத் தேர்வு நடத்துவதா? என பள்ளிக் கல்வித்துறை தெரிவிக்க வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.


 கலைத் திருவிழா போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் பங்கு பெறுவதாக EMIS - ல் பதிவு செய்ய வேண்டும் என்று மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மூலம் வலியுறுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.


 இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டணி தெரிவித்து உள்ளதாவது:

’’திருச்சி மாவட்டத்தில் 2 இலட்சம் மாணவர்கள் இருக்கிறார்கள், அந்த இரண்டு இலட்சம் மாணவர்களையும் கலைத் திருவிழா நிகழ்ச்சியில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என திருச்சி மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து தகவல் அனுப்பி உள்ளனர். அறிவிப்புக்கும் நடைமுறை செயல்பாடுகளுக்கும் உள்ள புரிதலைக் கூட தெரியாதவர்கள் ஆண்டுதோறும் காலாண்டுத் தேர்வு நேரத்தில்தான் இந்த கலைத் திருவிழா நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள்.


 மாணவர்களுக்கு பாடம் எப்படி நடத்துவது?


கலைத் திருவிழா நிகழ்ச்சி வரவேற்க வேண்டிய நிகழ்ச்சியாக இருந்தாலும் 20 நாட்கள் பயிற்சி நடத்துகின்ற பொழுது மாணவர்களுக்கு பாடம் எப்படி நடத்துவது? காலாண்டுத் தேர்வை மாணவர்கள் எப்படி எழுதுவார்கள்? ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்ககம் மாணவர்களின் கல்வி நலனையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’’.


 இவ்வாறு ஐபெட்டோ (தமிழக ஆசிரியர் கூட்டணி) அகில இந்தியச் செயலாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


கலைத் திருவிழா


தமிழகத்தில்‌ உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின்‌ கலைத்‌ திறன்களை வெளிக்கொணரும்‌ விதமாக, கலைத் திருவிழா அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு, பள்ளி, வட்டாரம், மாவட்டம்‌ மற்றும்‌ மாநில அளவில்‌ கலைத்திருவிழா போட்டிகள்‌ நடத்தப்பட்டன.


அனைத்து மாணவர்களையும் பங்குபெற ஊக்கப்படுத்த வேண்டும்


அடுத்தடுத்த ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் கலைத் திருவிழா விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 1 முதல் 12அம் வகுப்பு வரை கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. இதில், அனைத்து மாணவர்களையும் பங்குபெற ஊக்கப்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.