புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, டிசம்பர் 2ஆம் தேதி குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் நடத்த உள்ளதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களின் முதன்மைக் கோரிக்கை, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதுதான்.. இந்த கோரிக்கையை நிறைவேற்ற சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் என்று தனி இயக்கமே செயல்பட்டு வருகிறது. 


வலுப்பெறும் ஓய்வூதியக் கோரிக்கை


இந்த நிலையில் நாளை குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் நடத்த உள்ளதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள், பல்வேறு ஆசிரியர் சங்கங்களுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:


’’புதிய ஓய்வூதியத்‌ திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்‌ திட்டத்தை அமல்படுத்த வேண்டும்‌ எனும்‌ ஒற்றைக்‌ கோரிக்ககயை வலியுறுத்தி கடந்த மூன்றாண்டுகளாக எங்களது அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த ஒற்றைக்‌ கோரிக்கை நிறைவேற்றப்பட்டால்‌ மறுநிமிடமே இந்த இயக்கம்‌ கலைக்கப்படும்‌ என்ற இலக்கோடு துவங்கி பயணித்துக்‌ கொண்டிருக்கிறோம்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.


தொடர் போராட்டங்கள்


எங்களது இயக்கத்தின்‌ சார்பாக திமுக-வின்‌ தேர்தல்‌ கால வாக்குறுதியை நிறைவேற்றக்‌ கோரி முதலமைச்சருக்கு அஞ்சல்‌ அட்டை அனுப்பும்‌ போராட்டம்‌, மின்னஞ்சல்‌ அனுப்பும் போராட்டம்‌, கையெழுத்து இயக்கம்‌, மாவட்டத். தலைநகரங்களில்‌ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்‌, மாவட்ட அளவில்‌ உண்ணாவிரதம்‌, மண்டல அளவில்‌ கருத்தரங்கம்‌, மாநில அளவில்‌ சென்னையில்‌ உண்ணாவிரதம்‌, பேரணி மற்றும்‌ அனைத்து கட்சித்‌ தலைவர்கள்‌ பங்கேற்ற கோரிக்கை மாநாடு, மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ பேரணி, ஒரு நாள்‌ ஒட்டு மொத்தத்‌ தற்செயல்‌ விடுப்புப்‌ போராட்டம்‌, மாவட்டத்‌ தலை நகரங்களில்‌ 24 பணி நர காத்திருப்புப்‌ போராட்டம்‌, சென்னையில் 72 மணி நேர உண்ணாவிரதம்‌ என பல்வேறு தொடர்‌ இயக்கங்களை சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின்‌ சார்பாக நடத்தியுள்ளோம்‌.


அதன்‌ ஒரு பகுதியாக கடந்த அக்டோபர்‌ மாதம்‌ திருச்சியில்‌ நடைபெற்ற போராட்ட ஆயத்த மாநாட்டில்‌ தொடர்‌ போராட்டங்களை அறிவித்துள்ளோம்‌.


குடும்ப உறுப்பினர்‌களுடன்‌ பட்டினிப்‌ போராட்டம்‌


அதில்‌ முதல்‌ இயக்கமாக வரும் 2.12.2023 (சனிக்கிழமை) அன்று சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்‌ எனும்‌ ஒற்றைக்‌ கோரிக்கையை வலியுறுத்தி அரசின்‌ கவனத்தை ஈர்க்கும்‌ வகையில்‌ மாவட்டக்‌ தலைநகரங்களில்‌ "குடும்ப உறுப்பினர்‌களுடன்‌ பட்டினிப்‌ போராட்டம்‌" நடத்திட திட்டமிட்டுள்ளோம்.


அனைத்து அரசு ஊழியர்‌, ஆசிரியர்களிள்‌ வாழ்வாதாரக்‌ கோரிக்கை என்ற அடிப்படையில்‌ தாங்களும்‌ தங்களது அமைப்பைச்‌ சேர்ந்த உறுப்பினர்களும்‌ “குடும்ப உறுப்பினர்களுடன்‌ பட்டினிப்‌ போராட்டத்தில்‌” கலந்து கொண்டு வெற்றியடையச்‌ செய்ய வேண்டும்’’.


இவ்வாறு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.