மயிலாடுதுறை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை, மாவட்டத்தில் கல்வி இடைநிற்றல் செய்த மற்றும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கும் ஒரு முயற்சியாக "கல்லூரி கனவு" எனும் உயர்கல்வி வழிகாட்டி ஆலோசனை முகாமை ஏற்பாடு செய்துள்ளது. 

Continues below advertisement

தகுதியான 1567 மாணவர்கள் 

இந்த முகாமில் 2023-2024 மற்றும் 2024-2025 ஆம் கல்வியாண்டுகளில் பள்ளிக்கு வராதவர்கள், பெற்றோரை இழந்த நிலையில் இருப்பவர்கள், உடல் குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள், தொடர்ச்சியாக ஐம்பது நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வருகை தராதவர்கள் மற்றும் அரையாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று உயர்கல்வி சேர்வதற்கு சிரமப்படும் நிலையில் உள்ள 1567 மாணவர்கள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்க உள்ளனர்.

சனிக்கிழமை முகாம் 

மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆலோசனையின் பேரில், இந்த முகாம் எதிர்வரும் 16.05.2025 (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த முன்மாதிரியான முயற்சி, கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையையும், உயர்கல்வியை நோக்கிச் செல்வதற்கான உந்துதலையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

தெளிவான விளக்கங்கள் 

நிபுணர்களின் வழிகாட்டுதலில் உயர்கல்விக்கான தெளிவான வழிகாட்டலை இந்த "கல்லூரி கனவு" முகாமில் உயர்கல்வி மற்றும் கல்வி ஆலோசனைத் துறையில் நீண்ட அனுபவம் பெற்ற நிபுணர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விரிவான ஆலோசனைகளை வழங்க உள்ளனர். ஒவ்வொரு மாணவரின் பின்னணி மற்றும் எதிர்கால விருப்பங்களுக்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் வழிகாட்டுதல் அளிக்கப்படும். குறிப்பாக, மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான வழிமுறைகள், பல்வேறு வகையான இளங்கலை மற்றும் தொழிற்கல்வி படிப்புகள், ஒவ்வொரு படிப்புக்கான வேலைவாய்ப்புகள் ஆகியவை குறித்து தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது.

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்கள் கல்வி பெற வழிகள்

மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்கள் கல்வி பெறுவதற்கு உதவும் வகையில் வங்கிக் கடன்கள் பெறுவதற்கான வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த விரிவான ஆலோசனைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்டங்களான தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டம் (பெண்களுக்கான உயர்கல்வி உதவித்தொகை), தமிழ்புதல்வன் திட்டம் (ஆண் மாணவர்களுக்கான உதவித்தொகை) மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் "நான் முதல்வன்" திட்டம் ஆகியவற்றின் முக்கியத்துவம் மற்றும் அவற்றை பெறுவதற்கான தகுதிகள் குறித்தும் நிபுணர்கள் விளக்கவுரை நிகழ்த்த உள்ளனர். 

சவால்களைத் தாண்டி உயர்கல்வியை நோக்கி

நேரடி சேர்க்கை வாய்ப்புகள் உள்ள கல்லூரிகள் மற்றும் படிப்புகள் பற்றிய தகவல்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அரையாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் உயர்கல்வியை அடைவதில் உள்ள தடைகள் மற்றும் அவற்றை எவ்வாறு திறம்பட எதிர்கொள்வது என்பது குறித்தும் இந்த முகாமில் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. 

மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்கள் விரும்பும் கல்லூரிகளில் சேருவதற்கான உத்வேகத்தை அளிக்கும் வகையில் நிபுணர்கள் உரையாற்ற உள்ளனர். கல்வியின் முக்கியத்துவத்தையும், உயர்கல்வி ஒரு தனிநபரின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் எடுத்துரைத்து மாணவர்களுக்கு ஊக்கமளிக்கப்படும்.

EMIS எண் கட்டாயம்

இந்த முக்கியமான உயர்கல்வி வழிகாட்டி முகாமில் பங்கேற்க தகுதியுடைய 1567 மாணவர்களும் தவறாமல் தங்களது EMIS (Educational Management Information System) எண்ணை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். முகாம் நடைபெறும் நாளன்று இந்த எண்ணை காண்பிப்பது அவசியமாகும். இந்த ஏற்பாடு, முகாமில் பங்கேற்கும் மாணவர்களின் சரியான அடையாளத்தை உறுதி செய்வதோடு, அவர்களுக்குத் தேவையான தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவரின் இந்த சீரிய முயற்சி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், குறிப்பாக சவாலான சூழ்நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியின் கதவுகளை திறந்து, அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.